தினமலர் 16.12.2013
இயற்கையின் இலவசம் மழைநீர் சேமிக்க வலியுறுத்தல்
மதுரை: “இயற்கை கொடுத்த இலவசம் மழைநீர். அதை முறையாக சேமித்தால், கோடையில் ஏற்படும் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கலாம்’ என மழைநீர் சேகரிப்பு பயிற்சி பட்டறையில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை தானம் அறக்கட்டளை, சென்னை மழை இல்லம் சார்பில், மழைநீர் சேகரிப்பு, பயன்படுத்திய நீரை மீண்டும் பயன்படுத்துவது குறித்த பயிற்சி கருத்தரங்கு நடந்தது. தானம் வயலக திட்ட தலைவர் கனகவள்ளி, மழை இல்லம் அமைப்பின் இயக்குனர் சேகர் ராகவன் கூறியதாவது: இயற்கை நமக்கு இலவசமாக வழங்கும் மழைநீரை முறையாக சேமிக்காமல் வீணாக்குகிறோம். வெளிநாடுகளில் மழைநீரை தோட்டம், வாகனங்களை சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்துகின்றனர்.
தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்தும், அவை பராமரிக்கப்படாமல் காலி தொட்டிகளாகவே இருக்கின்றன. சென்னையில் பல வீடுகளில் ஆழ்குழாய், மழைநீர், கழிவுநீர் தேக்கி வைக்கும் வகையில், 3 பிரிவுகளாக தண்ணீர் தொட்டிகளை அமைக்கின்றனர். கழிவுநீரை மறுசுழற்சி செய்து அதை துணி துவைப்பதற்கும், மீண்டும் கழிவறைகளுக்கு பயன்படுத்தவும் முடியும். மக்களுக்கு விழிப்புணர்வு குறைந்து வரும் நிலையில், கட்டுமான பொறியாளர்களுக்கு மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை எடுத்துரைக்றோம், என்றனர்.