தினமலர் 13.04.2010
இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்வு: பள்ளிபாளையம் கவுன்சில் தீர்மானம்
பள்ளிபாளையம்: ‘பள்ளிபாளையம் நகராட்சியை, இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்‘ என, கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பள்ளிபாளையம் நகராட்சி கவுன்சில் கூட்டம், சேர்மன் குமார் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்: சுப்ரமணி (அ.தி.மு.க.,): கோடைகாலம் துவங்கி உள்ள நிலையில், நகராட்சி பகுதியில் உள்ள பெரும்பாலான ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லை. அதனால், மக்கள் அவதிப்படுகின்றனர். குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார் (சேர்மன்): குடிநீர் பிரச்னையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ரங்கசாமி (அ.தி.மு.க., ): காவிரி ஆற்றங்கரைக்கு பாதுகாப்பான தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
சேர்மன்: தடுப்பு சுவர் அமைப்பது தொடர்பாக, மின்வாரியம் மற்றும் பொதுப்பணித்துறைக்கு கடிதம் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்.
சாரதா (ம.தி.மு.க.,): காவேரி ரயில் நிலையம் செல்லும் சாலை ஓரமுள்ள சாக்கடை மீது காங்கிரீட் சிலாப்கள் அமைக்க வேண்டும்.
சேர்மன்: ரயில் நிலையம் செல்லும் சாலை நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது. இங்கு சிமெண்ட் சிலாப்கள் அமைக்க சம்பந்தப்பட்ட துறைக்கு கோரிக்கை வைக்கப்படும்.
தண்டபாணி (தி.மு.க.,): காவிரி ஆற்றில் இருந்து மக்களுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை. அதனால், வழக்கமாக வினியோகிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்.
சேர்மன்: குடிநீர் வழக்குவது அரைமணி நேரம் நீட்டிக்கப்படும்.
துரைசாமி (செயல் அலுவலர்): பள்ளிபாளையம் நகராட்சி தற்போது மூன்றாம் நிலை நகராட்சியாக உள்ளது. வருமான அடிப்படையில், மூன்றாண்டு சராசரி தொகை 2.34 கோடி ரூபாயாக உள்ளது. நகர மக்களின் அடிப்படை வசதிகளை அதிகரிக்கும் வகையில், இரண்டாம்நிலை நகராட்சியாக தரம் உயர்த்த கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்புமாறு அரசு கேட்டுள்ளது.
சேர்மன்: பள்ளிபாளையம் நகராட்சி இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்வதால், மக்களின் அடிப்படை தேவைகளுக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யும். மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட் தரம் உயரும். தொடர்ந்து கவுன்சில் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம், அனைத்து கவுன்சிலர்களாலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.