தினமணி 2.11.2009
இரண்டு ஆண்டுகளில் தனி குடிநீர் திட்டம்
சேலம், நவ. 1: இரண்டு ஆண்டுகளில் சேலத்தில் தனி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மேயர் ரேகா பிரியதர்ஷிணி தெரிவித்தார்.
சேலம் மாநகராட்சியில் உள்ளாட்சிகள் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆணையர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் காமராஜ் வரவேற்றார்.
விழாவில் மேயர் ரேகா பிரியதர்ஷிணி பேசியது: சேலம் மாநகர மக்கள் நீண்ட நாள்களாக எதிர்பார்த்து வந்த பாதாள சாக்கடைத் திட்டம் விரைவில் நிறைவேற உள்ளது. இதேபோல் ரூ.283 கோடி செலவில் தனி குடிநீர் திட்டமும் நிறைவேற உள்ளது.
இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு பெறுவதற்காக வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டியிடம் வலியுறுத்தியுள்ளார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நிதி ஒதுக்கீடு செய்வதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். எனவே இந்தத் திட்டமும் விரைவில் தொடங்கப்படும்.
வரும் இரண்டு ஆண்டுகளில் தனி குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்றார் அவர்.
உள்ளாட்சி தின விழாவையொட்டி சென்னையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற சேலம் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு மேயர் பரிசுகள் வழங்கினார்.
பின்னர் மாநகராட்சி பள்ளிகளில் நடைபெற்ற பேச்சுப் போட்டி, விநாடி–வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கும் மேயர் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
துணை மேயர் பன்னீர் செல்வம், மண்டலத் தலைவர்கள் மோகன், சரவணன், அசோகன், நகர் நல அலுவலர் பொற்கொடி, கவுன்சிலர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.