தினமலர் 21.01.2010
இறைச்சி கடைகளில் தொழிலாளர் துறை அதிரடி : முறைகேடு தராசுகள் பறிமுதல்
உடுமலை : உடுமலை தொழிலாளர் துறை சார்பில், இறைச்சி மற்றும் மீன் கடைகளில் நேற்று அதிரடி “ஆய்வு‘ செய்து, முறைகேட்டில் ஈடுபட்ட கடைகளில் இருந்த தராசுகளை பறிமுதல் செய்தனர்.
உடுமலை பகுதிகளில், தொழிலாளர் துறையிடம், தராசு மற்றும் எடைகற்களுக்கு முத்திரை பதிக்காமலும், மின்னணு எடை கருவிகள் உரிய அனுமதியில்லாமல் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இம்முறைகேடுகளை கண்டு பிடிக்க தொழிலாளர் நல துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். உடுமலை ராஜேந்திரா சாலை ரோட்டிலுள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளில் உடுமலை தொழிலாளர் துறை சட்டமுறை எடை ஆய்வாளர் வேலுசாமி தலைமையில், ராமசாமி, சேதுமாதவன், முருகேசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத்தில் முத்திரை புதுப்பிக்காமல் பயன்படுத்தி வந்த மின்னணு எடை கருவியினை பறிமுதல் செய்தனர். இது போன்று, மற்ற கடைகளிலும் முத்திரை புதுப்பிக்காத எடை கருவி மற்றும் எடை அளவு கருவிகளை பறி முதல் செய்தனர்.
தொழிலாளர் துறை அதிகாரிகள் கூறியதாவது: சட்டமுறை எடை அளவு கட்டுப்பாட்டு அதிகாரி, கோவை தொழிலாளர்துறை துணை ஆணையர், திருப்பூர் தொழிலாளர் ஆய்வாளர் அவர்களின் அறிவுறுத்தலின் படி உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள வர்த்தக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், முத்திரை புதுப்பிக்காமல் பயன்படுத்தி வரும் எடை அளவு கருவிகள் பறிமுதல் செய்யப்படுகிறது. நேற்று உடுமலை ராஜேந்திரா சாலை ரோட்டிலுள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில் ஆய்வுமேற்கொண்டு முத்திரை புதுப்பிக்காத மின்னணு எடை கருவி மற்றும் எடைஅளவு கருவிகள் பறிமுதல் செய்யப் பட்டது. முத்திரை புதுப்பிக்காமல் பயன்படுத்தியதற்கு அபாராதம் விதிக்கப்படும். பின், முத்திரை புதுப்பிக்கப்பட்டு வழங்கப்படும். மேலும், தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு தொழிலாளர் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.