தினமலர் 30.03.2010
இறைச்சி கடைகளுக்கு மாநகராட்சி எச்சரிக்கை
திருப்பூர் : ‘அரசு அறிவிப்பை மீறி செயல்பட்டால், இறைச்சி கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்‘ என, மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.நேற்று முன்தினம் மகாவீர் ஜெயந்தி தினத்தை ஒட்டி, இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப் பட்டிருந்தது. இருப்பினும், மாநகராட்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இறைச்சி கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன. இதுகுறித்த செய்தி, ‘தினமலர்‘ நாளிதழில் படத்துடன் வெளியானது. இதையடுத்து, மாநகராட்சி சார்பில் இறைச்சி கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நகர் நல அலுவலர் ஜவஹர்லால் அறிக்கை: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 28ம் தேதி மகாவீர் ஜெயந்தியை ஒட்டி, இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என 160 கடைகளுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டதில், கொங்கு மெயின்ரோடு, அவிநாசி ரோடு, பல்லடம் ரோடு, வெள்ளியங்காடு பகுதி களில் இறைச்சி விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது.அக்கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டி ருந்த 40 கிலோ ஆட்டிறைச்சி, 60 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, மாநகராட்சி உரக் கிடங்கில் புதைக்கப்பட்டது. இறைச்சி விற்பனை கடைகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இனி, வரும் காலங்களில் அரசு அறி விப்பை மீறி செயல்பட்டால், உரிமம் ரத்து செய்யப் படும், என்ற இறுதி அறிவிப்பும் வழங்கப்பட்டது. இவ்வாறு, ஜவஹர்லால் தெரிவித்துள்ளார்.