இறைச்சி கழிவுகளை சாலையோரம் கொட்டாதீர்கள்
கோவை, : கோவை மாநகரில் இறைச்சி கழிவுகளை சாலையோரம் கொட்ட வேண்டாம், கடை கடையாக மாநகராட்சி ஊழியர்களை நேரில் வந்து எடுத்துச்செல்வார்கள் என கமிஷனர் லதா கூறினார்.
கோவை மாநகரில் இறைச்சி கடை நடத்துவோர், மட்டன், சிக்கன், மீன் உள்ளிட்ட இறைச்சி கழிவுகளை சாலையோரம் கொட்டுவதால் அதை சாப்பிட தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. அத்துடன், சாலையின் குறுக்கும், நெடுக்குமாக ஓடி வாகன ஓட்டிகளை விபத்துக்கு உள்ளாக்குகிறது. எனவே, இறைச்சி கழிவுகளை, வியாபாரிகள் சாலையோரம் கொட்டக்கூடாது, தங்கள் கடைகளிலேயே மூட்டை மூட்டையாக கட்டி வைக்கவேண்டும், அதை மாநகராட்சி ஊழியர்கள் நேரில் வந்து எடுத்துச்செல்வார்கள் என நேற்று நடந்த மாமன்ற கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுபற்றி மாநகராட்சி கமிஷனர் லதா கூறியதாவது:
கோவை மாநகரில் 100 வார்டுகளிலும் தினமும் 250 மெட்ரிக் டன் குப்பை சேகரம் ஆகிறது. மாநகராட்சியுடன், 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், ஒரு ஊராட்சி என 11 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்ட பிறகு குப்பையின் அளவு அதிகரித்துள்ளது. இவற்றில், தினம் 15 முதல் 25 டன் இறைச்சி கழிவுகளும் சேகரம் ஆகிறது. இவை, இரண்டாம் தர மருத்துவ கழிவுகள் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இக்கழிவை முறையாக அழிக்காவிட்டால் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும்.
மாநகரில் உள்ள பல இறைச்சி கடை வியாபாரிகள் நள்ளிரவு நேரங்களில் இறைச்சி கழிவுகளை சாலையோரம், குளம், ஏரி, கால்வாய் ஓரம் கொட்டிச்சென்று விடுகின்றனர். இது, தவறு. இப்படி செய்வதால் தெருநாய்கள் இவற்றை சாப்பிட வருவதுடன், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துகிறது.