தினமணி 19.08.2009
இலந்தைகுளம் பொழுதுபோக்கு பூங்கா: தனியார் பங்கேற்புடன் நிறைவேற்ற முடிவு
திருநெல்வேலி, ஆக. 18: பாளையங்கோட்டை இலந்தைகுளத்தில் அமைக்கப்படவுள்ள பொழுதுபோக்கு பூங்கா, நேருஜி சிறுவர் பூங்காவில் அமைக்கப்படவுள்ள பல்நோக்குக் கலையரங்கு ஆகிய 2 திட்டங்களையும் தனியார் பங்கேற்புடன் செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இலந்தைகுளத்தில் ரூ. 1.5 கோடியில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கவும், நேருஜி சிறுவர் பூங்காவில் ரூ. 5.10 கோடியில் பல்நோக்குக் கலையரங்கு கட்டவும் திட்டமிடப்பட்டது.
இவ்விரு திட்டங்களையும் மாநகராட்சி நிர்வாகம் மட்டுமே நிறைவேற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. இதனால் திட்டம் நிறைவேறுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், இத் திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ள இடங்களை தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவை நிறுவனக் குழுவினர் கடந்த 14-ம் தேதி பார்வையிட்டுச் சென்றனர்.
அதைத் தொடர்ந்து இவ்விரு திட்டங்களையும் பொதுமக்கள்–தனியார் பங்களிப்புடன் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தனியார் நிறுவனம் இத் திட்டங்களை நிறைவேற்றி, இயக்கி பின்னர் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பின்பு மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும்.
அதற்காக விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவை நிறுவனத்தின் மானியம் அல்லது அடையாறு பூங்கா அறக்கட்டளை அல்லது திட்ட உருவாக்கல் மானிய நிதி
ஆகிய ஏதேனும் ஒன்றில் இருந்து நிதியுதவி பெற நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு கோரிக்கை விடுத்து புதன்கிழமை நடைபெறும் மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.