தினமணி 5.11.2009
இலவச வீட்டுமனைப் பட்டா விரைவில் வழங்க நடவடிக்கை
திருச்சி, நவ. 4: இலவச வீட்டுமனைப் பட்டா கோரி விண்ணப்பித்துள்ளோருக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு.
திருச்சி 31-வது வார்டில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் 1789 குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளையும், 44-வது வார்டு பகுதியைச் சேர்ந்த 271 குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகளையும் வழங்கி அவர் மேலும் பேசியது:
திருச்சி மாநகராட்சியின் 31-வது வார்டில் சாலை செப்பனிடும் பணி, வடிகால் அமைக்கும் பணி, நியாய விலைக் கட்டடம், கழிப்பிடம் கட்டும் பணிகள் ரூ. 68.25 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது ரூ. 2 லட்சத்தில் சாலை செப்பனிடும் பணிகளும், ரூ. 26.50 லட்சத்தில் மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் பள்ளிக் கட்டடங்கள் கட்டும் பணியும் நடைபெற்று வருகின்றன.
44-வது வார்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 17.86 கோடியில் சாலை செப்பனிடும் பணி, வடிகால்கள், புதை வடிகால்கள் அமைத்தல், தெரு மின் விளக்குகள் அமைத்தல், குடிநீர்க் குழாய் பதித்தல், சமுதாயக்கூடம், உடல்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தற்போது ரூ. 24.80 லட்சத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் 60 வார்டுகளில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 110 லிட்டர் சீரான குடிநீர் வழங்க ரூ. 169 கோடியில் மாநகராட்சி குடிநீர் விரிவாக்கத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அமைச்சர் நேரு.
இந்த விழாக்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வ. தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார்.
எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, கே.என். சேகரன், மாநகராட்சி மேயர் எஸ். சுஜாதா, துணை மேயர் மு. அன்பழகன். ஆணையர் த.தி. பால்சாமி, கோட்டத் தலைவர் எஸ். பாலமுருகன், மாநகராட்சி உறுப்பினர்கள் சீதாலட்சுமி முருகானந்தம், ஆர். ஹேமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.