தினமலர் 23.12.2009
ஈரோடு மாநகராட்சிக்கு சூரம்பட்டி நகராட்சி கெடு! குப்பை கொட்ட அனுமதித்தால்தான் பங்களிப்பு தொகை
ஈரோடு: குப்பை கொட்ட அனுமதித்தால்தான் பாதாள சாக்கடை திட்டத்துக்கு பங்களிப்பு தொகை வழங்கப்படும் என ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்துக்கு சூரம்பட்டி நகராட்சி கெடு விதித்துள்ளது. சூரம்பட்டி நகராட்சியில் 18 வார்கள் உள்ளன. வார்டுகளில் சேரும் குப்பைகளை சேகரித்து மக்கவைத்து உரமாக்கும் வகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த, நகராட்சி நிர்வாகம் சார்பில் தொட்டிபாளையத்தில் இடம் வாங்கப்பட்டது. ஒன்றரை ஆண்டுக்கு முன், குப்பை கொட்டும் இடத்திலிருந்து 15 அடி ஆழம், 80 அடி நீளத்துக்கு குழி தோண்டப்பட்டு அங்கிருந்து மண் திருடப்பட்டது. குழியில் ஏற்பட்ட நீர் கசிவு குப்பையுடன் சேர்ந்து துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி மக்கள் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, சித்தோடு ஐ.ஆர்.டி.டி., கல்லூரியின் பின்பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தில் மாவட்ட நிர்வாகம் இடம் ஒதுக்கியது. அப்பகுதியில் உள்ள கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கும் குப்பை கொட்ட முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்ட இடம் இல்லாமல் தவித்து வருகிறது. தெருக்களில், அன்றாடம் குப்பை அள்ள முடியாமல், சுகாதாரக் கேடாக காட்சியளிக்கிறது. சூரம்பட்டி நகராட்சி கூட்டம் நேற்று காலை நடந்தது. அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஜெகதீஸ், தங்கவேல், குமாரவேல், வெங்கடாசலம், தே.மு.தி.க., கவுன்சிலர் செல்வகுமார், சுயேச்சை கவுன்சிலர் ஜெயமணி ஆகியோர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். கவுன்சிலர் ஜெகதீஸ் கூறியதாவது: நகராட்சி பகுதியில் இரண்டு ஆண்டுகளாக குப்பை பிரச்னை உள்ளது. குப்பையை அகற்ற நகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல், காசிபாளையம் நகராட்சி குடிநீருக்கான கட்டணம் 80 லட்சம் ரூபாய் சூரம்பட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டியதுள்ளது.
அதில் பத்து லட்சம் ரூபாய்தான் செலுத்தியுள்ளனர். மீதி 70 லட்சம் ரூபாயை சூரம்பட்டி நகராட்சி நிர்வாகம் வசூலிக்காமல் காலம் தாழ்த்துகிறது. இதை வலியுறுத்தி வெளிநடப்பு செய்தோம். இவ்வாறு அவர் கூறினார். நகராட்சி சேர்மன் லோகநாதன் கூறியதாவது: சூரம்பட்டி நகராட்சிக்கு 70 லட்சம் ரூபாய் காசிபாளையம் நகராட்சி தர வேண்டியுள்ளது. இது குறித்து செயல் அலுவலர் பல நினைவூட்டும் கடிதங்களை எழுதிவிட்டார். இருப்பினும் பணம் வரவில்லை. சென்னை நகராட்சி நிர்வாகங்களின் இயக்குனருக்கு கடிதம் எழுதினார். அதில் காசிபாளையம் நகராட்சி நிர்வாகம் பாக்கி வைத்துள்ள 70 லட்சம் ரூபாயை, அவர்களுக்கு வழங்கும் கிராண்ட் ஃபண்டில் பிடித்து எங்களுக்கு வழங்குமாறு கடிதம் எழுதியுள்ளார். ஈரோடு மாநகராட்சி குப்பை கொட்டும் இடத்தில், சூரம்பட்டி நகராட்சி குப்பையை கொட்ட அனுமதி கேட்டு இயக்குனருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இயக்குனரும், குப்பை கொட்ட அனுமதிக்குமாறு, மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், மாநகராட்சி நிர்வாகம் எங்களை குப்பை கொட்ட அனுமதிக்கவில்லை.
மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்த உள்ள, பாதாள சாக்கடை திட்டத்துக்கு, சூரம்பட்டி நகராட்சியின் பங்களிப்பு தொகை கேட்டுள்ளது. அது குறித்த தீர்மானத்தை கூட்டத்தில் வைத்தபோது, “முதலில் மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்ட அனுமதிக்கட்டும். அதன் பிறகு, பாதாள சாக்கடைக்கு பங்களிப்பு வழங்குவதி குறித்து பார்க்கலாம்’ என கவுன்சிலர்கள் கூறிவிட்டனர். மாநகராட்சி இடத்தில் குப்பை கொட்ட அனுமதித்து சூரம்பட்டி நகராட்சிக்கு சென்னை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர், நேரடியாக கடிதம் அனுப்ப வேண்டும். அதுவரை பாதாள சாக்கடைக்கு பங்களிப்பு தொகை வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.