தினமலர் 01.11.2010
ஈரோட்டில் பூ மார்க்கெட் அமைக்கும் பணி தீவிரம்
ஈரோடு: ஈரோடு சின்ன மார்க்கெட்டில் மூன்று லட்சம் ரூபாய் செலவில் பூ மார்க்கெட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.ஈரோடு மாவட்டத்தில் வெள்ளோடு, சத்தி, அந்தியூர், பருவாச்சி உள்ளிட்ட பல இடங்களில் மல்லிகை பூக்களும், ஊட்டி, கொடைக்கானல், ஒசூர் உள்ளிட்ட பல இடங்களில் ரோஜா உட்பட பல்வேறு பூ வகைகளும் அறுவடை செய்யப்படுகின்றன. மல்லிகை பூக்களை பொருத்தவரை சத்தி, வெள்ளோடு ஆகிய இடங்களிலிருந்து பூக்கள் வரத்தாகின்றன.ஈரோட்டில் உள்ள தனியார் பூ கமிஷன் மண்டி உரிமையாளர்கள் பூக்களை மொத்தமாக வாங்கி, விற்பனை செய்கின்றனர். ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்துக்கு கட்டுப்பட்ட நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் சின்ன மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை செய்வதற்கென தனியாக பூ மார்க்கெட் இல்லை.சென்ற 2006ல் ஈரோட்டில் தனியாக பூ மார்க்கெட் அமைக்க வேண்டும் என அப்போதைய நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனடிப்படையில், ஈரோடு அகில்மேடு வீதியில் சின்ன மார்க்கெட்டின் ஒரு பகுதியில் பூ மார்க்கெட்டுக்கு “ஷெட்‘ அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஒரு மாதத்துக்கு முன் துவக்கப்பட்ட “ஷெட்‘ அமைக்கும் பணிக்கு, மூன்று லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 800 சதுர அடி பரப்பளவில் நடந்து வரும் “ஷெட்‘ அமைக்கும் பணி 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஒரு மாதத்தில் திறப்பு விழா நடக்கும் என தெரிகிறது.ஈரோட்டில் அமையவுள்ள பூ மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதால், “ஷெட்‘ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.