உதகை நகர்மன்றக் கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
காவிரி நதி நீர் ஆணையத்தின் தீர்ப்பை அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்ததற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து, உதகை நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உதகை நகர்மன்ற மாதாந்திரக் கூட்டம் அதன் தலைவர் சத்தியபாமா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
ஆர்.மாதவன் (அ.தி.மு.க.): உதகை நகரில் பெரும்பாலான பகுதிகளில் அனுமதியின்றி நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது கவலைக்குரியது. நகராட்சியின் அனைத்துப் பகுதிகளுக்கும் நிலத்தடி நீர் விநியோகிப்பவர்கள் மூலமாக இலவசமாக தினமும் தலா 2 லோடு தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சம்பத் (அ.தி.மு.க.): உதகை நகரில் பல இடங்களில் கழிவு நீர்க் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஜே.ரவிக்குமார் (தி.மு.க.): குப்பை முறையாக அகற்றப்படாததால் நகரமே குப்பைக்கூளங்கள் நிறைந்ததாக மாறிவிட்டது. நகரில் தெருவிளக்குகள் எரியாததால் திருட்டுகளும் அதிகரித்துவிட்டன. குடிநீர்த் தட்டுப்பாடு உள்ளதால், மூன்றாவது குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும்.
ஆர்.சிவகுமார் (ஆணையர்): வனப்பகுதிகளையொட்டியுள்ள இடங்களில் மட்டும் குழாய் பதிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. வனத்துறை அனுமதி கிடைத்ததும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு விரைவில் முடிக்கப்படும்.
கோபாலகிருஷ்ணன் (துணைத் தலைவர்): உதகை காந்தி மைதானம் மிக மோசமான நிலையில் உள்ளது. இதை அரசு மேனிலைப் பள்ளி நிர்வாகத்திடமிருந்து திரும்பப் பெற்று நகராட்சியே பராமரிக்க வேண்டும்.
பாபு (தே.மு.தி.க.): நகரின் பல்வேறு இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆட்டோ ஸ்டேண்டுகளால் பொதுமக்கள் தங்களது வாகனத்தைக்கூட நிறுத்த முடியாத நிலை உள்ளது என்றார்.
இதற்கிடையே, 30-ஆவது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் வினோதா, தங்களது வார்டில் எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் நகர்மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு வந்த கவுன்சிலர் வினோதா, அந்தப் பகுதி தனது வார்டில் இல்லையென மறுத்ததால், அதற்கான ஆதாரங்களைக் காட்டிய அப்பகுதி மக்களை மற்ற உறுப்பினர்கள் சமாதானப்படுத்தி அனுப்பினர்.