தினமணி 02.11.2010
உள்ளாட்சிகள் தின விழா
உளுந்தூர்பேட்டை, நவ. 1: விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் உள்ளாட்சி தின விழா பேரூராட்சி மன்றத்தலைவர் வெ.இராதாகிருஷ்ணன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு, உளுந்தூர்பேட்டை நகரத்தை தூய்மையான நகரமாக மாற்றுவதற்கு பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர்கள் ராஜேந்திரன், பாலகுமார் ஆகியோர் முன்னிலையில் துப்புரவு ஊழியர்களுடன், உளுந்தூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட மாணவிகள் சேர்ந்து பேரூராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு திருவெண்ணெய்நல்லூர் ரோடு பகுதிகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர்.
இப் பணியின்போது, பேரூராட்சி செயல் அலுவலர் இந்திரா, இளநிலை உதவியாளர் தங்கவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
திண்டிவனத்தில்…
திண்டிவனம் நகராட்சி சார்பில் உள்ளாட்சி தினவிழா நகர்மன்றத் தலைவர் பூபாலன் தலைமையில் திங்கள்கிழமை நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்றது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், மக்களுக்கும் இடையேயான தொடர்புகள் மற்றும் நல்லுறவை மேம்படுத்துகிற வகையில், இவற்றின் பணிகள் சம்மந்தப்பட்ட பகுதிகளில் வாழ்கிற மக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும் உள்ளாட்சி தின விழா ஆண்டு தோறும் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் திண்டிவனம் நகராட்சி சார்பில் நடைபெற்ற விழாவில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு “உள்ளாட்சி அமைப்பு‘ என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ 96 ஆயிரம் சுழல்நிதியாக நகர்மன்றத் தலைவரால் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை நகராட்சியின் சமுதாய அமைப்பாளர்களான ராஜலட்சுமி, செல்லப்பன் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் செய்திருந்தனர்.