தினமலர் 12.08.2010
உள்ளாட்சியில் அனுமதி பெறாத தொழிற்சாலைகள்
ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் தொழிற்சாலைகள் உள்ளாட்சி அமைப்புகளிடம் முறைப்படி அனுமதி பெறாதது சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வின்போது தெரிய வந்தது.ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் இருங்காட்டுகோட்டை, ஒரகடம், மாம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், திருமங்கலம் என ஐந்து சிப்காட் வளாகம் உள்ளன. இவற்றில் 450க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு மேற்கொண்டது.
அப்போது சிப்காட்டிற்கு நிலம் கொடுத்த பொதுமக்களுக்கு தொழிற்சாலைகளில் வேலை வழங்கப்பட்டுள்ளதா, கட்டட அனுமதி, தொழிற்சாலை உரிமம் உள்ளாட்சியில் பெறப்பட்டுள்ளதா, உள்ளாட்சிகளுக்கு முறையாக வரி செலுத்தப்படுகிறதா என தொழிற்சாலை நிர்வாகிகளிடம் கேட்டனர். அவர்கள் அனைத்தும் முறையாக செய்துள்ளதாக தெரிவித்தனர். ஆனால், ஆய்வில் சில தொழிற்சாலைகள் உள்ளாட்சியில் அனுமதி பெறாமல் கட்டடம் கட்டியிருப்பது தெரிந்தது. மேலும், வருவாய் துறையிடம் தடையில்லா சான்று பெறாமலிருப்பதும் தெரிந்தது. சிப்காட் நிர்வாகமும், சிப்காட் தொழிற்பேட்டைக்கு முறையாக நகர் ஊரமைப்பு திட்டத்தில் அனுமதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் யசோதா கூறும்போது, “ஒரு சில குறைகள் உள்ளன. அவற்றை நிவர்த்தி செய்யும்படி கூறியுள்ளோம். ஆய்வு குறித்து அரசுக்கு அறிக்கை சமர்பிப்போம்‘ என்றார்.