உள்ளூர் திட்டக் குழுமத்தில் கட்டட வரைபட அனுமதிக்கு முறைகேடாக நிதி வசூலிப்பதாகப் புகார்
மதுரை மாநகராட்சி உள்ளூர் திட்டக் குழுமத்தில் கட்டட வரைபட அனுமதிக்கு அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை தவிர்த்து, சதுர அடிக்கு ரூ. 3 முதல் ரூ. 5 வரை நிர்ணயம் செய்து, அதிகாரி ஒருவரின் பெயரைச் சொல்லி சில ஊழியர்கள் முறைகேடாக நிதி வசூல் நடத்தி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பிட்ட சிலரின் வரைபடங்களை மட்டுமே பிப்ரவரி 26 ஆம் தேதி ஆட்சியர் தலைமையிலான குழுக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெறவும் திட்டமிட்டு செயல்படுவதாகக் கூறப்படுகின்றது.
இது தொடர்பாக, ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை மாநகராட்சி பகுதியில் மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி 1 கி.மீ. சுற்றளவுக்கு, 9 மீட்டர் உயரக் கட்டுப்பாடு தடையை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்து ஆட்சியர் தலைமையில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. விதிமீறல் கட்டடங்களின் பட்டியலும் தயாரிக்கப்படுவதாக, முந்தைய ஆட்சியர் காலத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆட்சியராக அன்சுல் மிஸ்ரா பொறுப்பேற்ற பின்னரும், இந்த விதிமீறல் கட்டடங்கள் குறித்து கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு மண்டல அலுவலகங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் பட்டியல் தயாரிக்கப்படுவதாக, மாநகராட்சி தரப்பிலும் கூறப்பட்டது.
மேலும், மாநகராட்சி பகுதியில் 2006 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை, முந்தைய நகரமைப்பு அதிகாரி ஒருவர் மூலம் பல ஆயிரம் கட்டடங்களுக்கு விதிகளை மீறி அனுமதி வழங்கப்பட்டது குறித்த விசாரணையும் நடைபெற்றது. இதில், உள்ளூர் திட்டக் குழுமத்தின் அதிகாரிகளின் கையெழுத்தையும் போலியாக போட்டு, முறைகேடாக கட்டட வரைபட அனுமதி வழங்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த புகார்கள் குறித்து விசாரணை நடப்பதாக, மாநகராட்சி தரப்பிலும் கூறப்பட்டு வந்தது. மாவட்ட ஆட்சியரும் விதிமீறல் கட்டடங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், விதிமீறல் கட்டடங்கள் குறித்த விசாரணை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதன் பின்னணியில், மாநகராட்சியில் உயர் பதவியில் இருக்கும் வி.வி.ஐ.பி.யும் ஒருவர் எனக் கூறப்படுகின்றது.
இதற்கிடையில், ஆட்சியரை தலைவராகக் கொண்டு இயங்கிவரும் உள்ளூர் திட்டக் குழுமத்திலும் வசூல் வேட்டை நடப்பதாக, தற்போது புகார்கள் எழுந்துள்ளன. மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்டத்திலுள்ள் அனைத்து உள்ளாட்சி அமைப்புப் பகுதிகளிலும், குடியிருப்பு கட்டடங்களுக்கு 4 ஆயிரம் சதுர அடிக்கு மேலும், வர்த்தக கட்டடங்களுக்கு 2 ஆயிரம் சதுர அடிக்கு மேலும் உள்ளூர் திட்டக் குழுமத்தில்தான் அனுமதி பெற வேண்டும். மேலும், 25 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட பல அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கட்டடங்களுக்கும் சென்னையிலுள்ள உள்ளூர் திட்டக் குழும இயக்குநர் அலுவலகத்தில் அனுமதி பெறவேண்டும். அதற்கு முன்னர், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான உள்ளூர் திட்டக் குழுமத்தில் அனுமதித்து பரிந்துரை செய்யப்பட வேண்டும்.
இந்த வகையிலான கட்டடங்களுக்கு அனுமதி கொடுப்பதா, வேண்டாமா? கட்டடங்களில் விதிமீறல்கள் இருக்கின்றனவா? என ஆலோசித்து அனுமதி வழங்குவது குறித்து, பிப்ரவரி 26 ஆம் தேதி, மதுரை மாவட்ட உள்ளூர் திட்டக் குழும ஆய்வுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், அனுமதி பெறுவதற்காக வைக்கப்படவுள்ள கட்டட வரைபடங்களுக்கு ஒரு அதிகாரி பெயரைச் சொல்லி, உள்ளூர் திட்டக் குழுமத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் வசூலில் இறங்கியிருப்பதாக, புகார்கள் எழுந்துள்ளன. அதிலும், அனுமதி பெறுவதற்காக சமர்ப்பிக்கப்படும் கட்டடத்தின் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை தவிர்த்து, சதுர அடிக்கு ரூ. 3 முதல் ரூ. 5 வரை முறைகேடாகவும், கறாராகவும் வசூலிப்பதாகக் கூறப்படுகின்றது.
இதற்கு ஒப்புக்கொள்ளாதவர்களின் கட்டட வரைபடங்களை, ஆட்சியர் தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தில் வைக்கப்படமாட்டாது என, நிதி வசூல் ஊழியர்கள் கூறி வருவதாகத் தெரிவித்தார் நேர்மையான அதிகாரி ஒருவர்.
ஏற்கெனவே, மதுரை மாநகரப் பகுதியில் ஆயிரக்கணக்கில் விதிமீறல் கட்டடங்கள் இருக்கின்ற நிலையில், மேலும் பல விதிமீறல் கட்டடங்களுக்கு போலியான வரைபடங்கள் மூலம் உள்ளூர் திட்டக் குழுமத்தில் அனுமதி பெற முயற்சி நடப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் இது குறித்து விரிவான விசாரணை நடத்தி, உள்ளூர் திட்டக் குழுமத்தில் நடைபெறும் வசூல் வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும், மீண்டும் விதிமீறல் கட்டடங்களுக்கு உள்ளூர் திட்டக் குழுமத்தில் அனுமதி கொடுப்பதைத் தடுக்க, ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.