தினமலர் 02.03.2010
‘உவ்வே’ உணவு சப்ளையை தவிர்க்க ஓட்டல் தொழிலாளருக்கு பயிற்சி : சுகாதாரத்துறை ஏற்பாடு
மதுரை : மதுரையில் ஒட்டல் மற்றும் கையேந்திபவன்களில் சுகாதாரமாக உணவு வழங்குதல் குறித்து தொழிலாளர்களுக்கு சிறப்பு பயிற்சி மார்ச் 6ம் தேதி துவங்க உள்ளது.
கோடை துவங்கிவிட்டதால், கூடவே குடிநீர் தொடர்பான பிரச்னைகளும் ஏற்படும். ஓட்டல்கள் உட்பட உணவுவிடுதிகளில் உணவு பரிமாறுவோருக்கும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு தேவைப்படுகிறது. இதற்காக பொது சுகாதாரத் துறை சார்பில் ஓட்டல் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்காக மதுரையில் உள்ள ஓட்டல்கள், டிபன் சென்டர்கள், சாதாரண உணவு விடுதிகள், சாலையோர விடுதிகள், கையேந்திபவன்கள் போன்றவை கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் இளங்கோவன் ஆலோசனையின் பேரில், மதுரையில் மாநகராட்சியின் நகர்நல அலுவலர் வி.சுப்ரமணியன் ஏற்பாடுகளை செய்து வருகிறார். துணைஇயக்குனர் பழனிச்சாமி உட்பட அதிகாரிகள் பயிற்சி அளிக்க உள்ளனர்.
முதற்கட்டமாக ஏ கிரேடு, பி கிரேடு ஓட்டல்களில் சமையல், பரிமாறுவோர், மேற்பார்வையாளர் என பணியாற்றும் தொழிலாளர்கள் 400 பேருக்கு இப்பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது, மாலையில் மோசமான, நல்ல ஓட்டல்களுக்கு நேரடியாக அழைத்துச் செல்லப்படுவர். அடுத்த கட்டமாக டிபன்சென்டர்கள், மெஸ்களில் பணியாற்றுவோருக்கும், அடுத்து கையேந்தி பவன்களில் பணியாற்றுவோருக்கு பயிற்சி அளிக்கப்படும்.
மாநகராட்சி நகர் நல அலுவலர் கூறுகையில், “”சுகாதாரமற்ற உணவால் வயிற்றுக் கோளாறு, டைபாய்டு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க ஓட்டல்களில் உணவு பரிமாறும் தொழிலில் உள்ள அனைவருக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். மார்ச், ஏப்ரலில் நடைபெறும் பயிற்சியில் தொழிலாளர்களுக்கு, சுகாதாரமான உணவு, தன்சுத்தம், சுற்றுப்புற சுத்தம், ஸ்டோர் பராமரிப்பு, உணவு கழிவுகளை சுத்தம் செய்வது உட்பட பல தலைப்புகளில் பயிற்சி தரப்படும்” என்றார்.