தினமலர் 10.08.2012
ஊட்டி ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை
ஊட்டி : ஊட்டி கோடப்பமந்து கால்வாய் கழிவுநீர், போட்ஹவுஸ் ஏரியில் கலக்காமல் தடுக்கும் நடவடிக்கைகளை, ஊட்டி நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கோடப்பமந்து கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஊட்டி ஏரியில் நேரடியாக கலக்கிறது. இதனால், ஏரி நீர் மாசுப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதையடுத்து, வனம் மற்றும் சுற்றுச்சூழல் மாநில செயலர் சங்கர், கடந்த 7ம் தேதி ஊட்டி ஏரியை பார்வையிட்டார். அவரது அறிவுரைப்படி, ஊட்டி கோடப்பமந்து கால்வாய் கழிவுநீர், ஏரியில் கலப்பதை தடுக்கும் பணியை, ஊட்டி நகராட்சி நிர்வாகம் துவக்கி உள்ளது. கால்வாயில் இருந்து வரும் கழிவுநீர், ஏரி கரையில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு முழுமையாக செல்லும் வகையில், அங்குள்ள தடுப்புகளின் மீது, தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கப்பட்டு வருகிறது.
நகராட்சி கமிஷனர் சிவக்குமார், பொறியாளர் ராமமூர்த்தி ஆகியோர், இப்பணிகளை பார்வையிட்டனர். அதிகாரிகள் கூறுகையில், “ஊட்டி நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், கோடப்பமந்து கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவு நீர், ஏரியில் கலக்காதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. தற்காலிகமாக, மணல் மூட்டைகளை அடுக்கும் பணிகள் நடக்கிறது,’ என்றனர்.