தினமலர் 24.03.2010
எட்டு மாநகராட்சி பள்ளிகளுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ்
கோவை: ”கோவை மாநகராட்சிக்கு உட் பட்ட எட்டு மேல்நிலைப்பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டில் ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் பெற திட்டமிடப்பட்டுள்ளது. இதனால்,மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த முடியும்,” என, மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார். கோவை மாநகராட்சி பட்ஜெட் நேற்றுமுன் தினம் தாக்கல் செய்யப் பட்டது. நடப்பு கல்வியாண்டில் எட்டு மாநகராட்சிப் பள்ளிகளை மேம்படுத்தி ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் பெறப்படவுள்ளது. பட்ஜெட்டில் இதற் கென ஆறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட் டுள்ளது. தரச்சான்றிதழ் பெறும் பள்ளிகள்: ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, ஆர்.எஸ். புரம் மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப் பள்ளி(மேற்கு), சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணாபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி. இது பற்றி மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், ”இப்பள்ளிகள் அனைத்துக்கும் ஒரே மாதிரியான வண்ணம் பூசப்படும். நூலகங்கள், கம்ப்யூட்டர் லேப், டைனிங் ஹால், விளையாட்டு வசதிகள் மேம்படுத்தப்படும். ”கல்வி கற்பிக்க நவீன உத்திகள் கையாளப்படும். கழிப்பறைகளின் எண்ணிக்கையும் தரமும் மேம்படுத்தப்படும். ஆசிரியர் பற்றாக்குறை இருக்காது. மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த சிறப்பு பயிற்சிகள் அளிக்கப் படும். ”பள்ளிகளின் தரம் உயர்வதால் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரமும் உயரும். இதன் வாயிலாக மாநகராட்சிப் பள்ளிகளில் படிப்பது பெருமைக்குரிய விஷயமாக மாறும். வரும் ஆண்டுகளில் பிற பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்,” என்றார்.