தினமணி 09.01.2010
எண்ணெய் விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு
வேலூர், ஜன. 18: வேலூரில் சமையல் எண்ணெய் விற்பனை நிலையங்களில் சுகாதாரத் துறை துணை இயக்குநர் தலைமையில் குழுவினர் திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் சமையல் எண்ணெய் பயன்பாட்டில் ஏராளமான கலப்படங்கள், தரமற்ற எண்ணெய் வகைகள் விற்பனைக்கு வந்துள்ளதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையொட்டி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சுரேஷ் தலைமையில், வேலூர் சுகாதார மாவட்டத்திற்கு உட்பட்ட 10 வட்டங்களிலும் இந்த திடீர் ஆய்வு நடைபெற்றது.
வேலூர் நகரில் தொரப்பாடி, சங்கரன்பாளையம், நேதாஜி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மொத்தம் மற்றும் சில்லறை எண்ணெய் விற்பனைக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. துணை ஆய்வாளர்கள் சுரேஷ், கெüரிசந்தர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் சரவண்ராஜ், மன்னப்பன், சுகாதார மேற்பார்வையாளர்கள் சுப்பிரமணி, புகழேந்தி உள்ளிட்டோர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் எண்ணெய்கள், சில்லறை வணிகத்துக்குப் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் உள்ளிட்டவற்றின் 500க்கும் மேற்பட்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சென்னை கிங்ஸ் தொழில்நுட்ப மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இந்த எண்ணெய் மாதிரிகளின் முடிவு வந்ததும் நடவடிக்கைகள் தொடரும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வினால் எண்ணெய் வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.