தினமலர் 13.08.2010
எல்லை விரிவாக்கத்தில் ஊராட்சிகளை சேர்ப்பதில் நீடிக்கும் சிக்கல்கள்
மதுரை: மதுரை மாநகராட்சி எல்லை, விரிவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், சுற்றியுள்ள ஊராட்சிகளை சேர்ப்பதில் சில சிக்கல்கள் உள்ளன.1971ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மதுரை மாநகராட்சி எல்லை, அதன் பிறகு மாற்றப்படவில்லை. அப்போது இருந்த அதே 52 சதுர கி.மீ., பரப்பளவே இப்போதும் நீடிக்கிறது.
நாளடைவில் உருவான, நகர்ப்புற பகுதிகளையும் சேர்த்து, மாநகராட்சி எல்லையை விரிவாக்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட நாட்களாக நீடிக்கிறது. இதை வலியுறுத்தி மாநகராட்சி சார்பில், தீர்மானங்களும் அவ்வப்போது நிறைவேற்றப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டன. இது குறித்து, செயலாளர் அளவிலான ஆலோசனைக் கூட்டம், ஆக.16ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. புதிய விரிவாக்க திட்டத்தின் படி, மாநகராட்சியின் சுற்றளவு 173 சதுர கி.மீ., ஆக அமையும். அருகில் உள்ள அவனியாபுரம், திருப்பரங்குன்றம், ஆனையூர் நகராட்சிகள், திருநகர், விளாங்குடி, ஹார்விபட்டி பேரூராட்சிகள் மற்றும் 21 ஊராட்சிகள் இணைக்கப்பட வேண்டும்.நகராட்சிகள் தரம் உயர்வு: மாநகராட்சியுடன் சேர்க்கப்பட உள்ள நிலையில், அவனியாபுரம், திருப்பரங்குன்றம் ஆகிய நகராட்சிகள் மூன்றாம் நிலையில் இருந்து முதல் நிலைக்கு தரம் உயர்த்தப் பட்டுள்ளது. ஆனையூர் இரண்டாம் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் அவற்றின் நிலை, அடிப்படை வசதிகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், மாநகராட்சியுடன் சேர, அந்நகராட்சிகள் ஒப்புக்கொள்ளுமா என்பது சந்தேகம்.ஊராட்சிகளைப் பொறுத்த வரை, வேறு மாதிரியான சிக்கல் இருக்கிறது. ஒரு ஊராட்சி ஒன்றியத்தில், ஏழெட்டு ஊராட்சிகள் இருக்கும். இந்த ஊராட்சிகளில் சிலவற்றை மட்டும் பிரித்து, மாநகராட்சியுடன் சேர்த்தால், ஊராட்சி ஒன்றியங்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.வசதிகள் செய்ய முடியுமா: மாநகராட்சி எல்லையை விரிவாக்கினால், புதிய பகுதிகளுக்கு சாலை, சாக்கடை, தெரு விளக்கு வசதிகள் ஏற்படுத்துவது, சாதாரண காரியமல்ல. குடிநீர் வழங்குவதே, பெரிய வேலையாக இருக்கும். தற்போது, மாநகராட்சியில் சுகாதார பணியாளர் பற்றாகுறை நிலவுகிறது. இது போதாது என்று, விரிவாக்க பகுதிகளையும் இணைத்தால், அங்கு சேரும் குப்பைகளை அகற்றுவதும் இன்னொரு வேலையாக இருக்கும்.அடுத்த சென்னை கூட்டத்தில், இக்கேள்விகளுக்கு விடை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.