எஸ்எம்எஸ் புகார் திட்டம் மாநகராட்சி கமிஷனர் வீடுதேடி சென்று ஆய்வு
கோவை: எஸ்எம்எஸ் புகார் திட்டத்தின்படி மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கிறார்களா என்பது பற்றி கமிஷனர் லதா வீடு தேடிச்சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட மக்கள், தங்கள் பகுதியில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்ய ‘எஸ்எம்எஸ்‘ திட்டம் கடந்த மாதம் 2ம்தேதி துவக்கப்பட்டது. இதற்காக, 9282202422 என்ற மொபைல் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தங்கள் பகுதியில் உள்ள பிரச்னை, புகார் தெரிவிப்பவரின் பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இந்த மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்தால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வுசெய்து நடவடிக்கை எடுப்பார்கள் என மேயர் செ.ம.வேலுசாமி, கமிஷனர் லதா ஆகியோர் அறிவித்தனர். தினமும் இந்த எண்ணுக்கு வரும் எஸ்எம்எஸ்களை பெற்று, உடனுக்குடன் பதில் அனுப்ப வும், இத்திட்டத்தை முறையாக செயல்படுத்தவும் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது.
இத்திட்டம் துவக்கப்பட்டு, ஒரு மாதம் தாண்டிவிட்டதால், அதிகாரிகள் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுத்துள்ளனர் என்பது பற்றி தெரிந்துகொள்ள கமிஷனர் லதா நேற்று அதிரடியாக வீடு தேடிச்சென்று ஆய்வு மேற்கொண்டார்.
23வது வார்டுக்கு உட்பட்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த வந்த எஸ்எம்எஸ் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா, குப்பைகள் முறையாக அகற்றப்பட்டுள்ளதா என கேட்டறிந்தார்.
15வது வார்டுக்கு உட்பட்ட வடவள்ளி பாரதியார் பல்கலைக்கழகம் அருகேயுள்ள ஸ்ரீதக்ஷா கார்டன் பகுதியில் ஒரு வீட்டில் ஆய்வுசெய்து, முறைப்படி குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதா, குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா என கேட்டறிந்தார்.
7வது வார்டுக்கு உட்பட்ட இடையர்பாளையம் 3வது வீதியில் இருந்து வரப்பெற்ற எஸ்எம்எஸ் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, சாக்கடை சரிவர தூர்வாரப்பட்டதா என அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர், வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட வேணுகோபால் லேஅவுட் பகுதியை பார்வையிட்டார். சாக்கடை கால்வாயில் உள்ள அடைப்புகளை அகற்றவும், மழைநீர் வடிகால்களை தூர் வாரவும் உத்தரவிட்டார்.
இதுபற்றி கமிஷனர் லதா கூறுகையில், ‘‘கடந்த ஒரு மாத காலத்தில் எஸ்எம்எஸ் மூலம் 2,433 புகார்கள் வரப்பெற்றுள்ளன.
இவற்றில், 2,127 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருசில புகார்கள் தொடர்பாக சரியான முகவரி இல்லை. புகார் தெரிவிப்பவர்கள் தங்களது பெயர், முகவரி, ஏரியா பிரச்னை பற்றி முழுமையான தகவல் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும்‘‘ என்றார்.
கமிஷனரின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக மாநகராட்சி அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.