தினகரன் 08.09.2010
‘ஏ’ கிரேடு அதிகாரி மீது நடவடிக்கை மாநகராட்சி கமிஷனர் மெஹ்ரா அதிகார வரம்பு மீறி செயல்படுகிறார் கவுன்சிலர்கள் தீர்மானம்
புதுடெல்லி, செப். 8: “மாநகராட்சி கமிஷனர் கே.எஸ்.மெஹ்ரா, ஆட்சி மன்றத்தின் அதிகாரத்தை தன்னிச்சையாக பயன்படுத்தி வரம்பு மீறி செயல்படுகிறார்” என்று மாநகராட்சி கவுன்சிலர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இதுபற்றி பா.ஜ.வைச் சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலரும், முன்னாள் மேயருமான ஆர்த்தி மேரா நிருபர்களிடம் கூறியதாவது:
மாநகராட்சியில் பணிபுரியும் ‘ஏ’ கிரேடு அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்கும் அதிகாரம் மாநகரட்சி மன்றத்துக்கு மட்டுமே இருக்கிறது. ஆனால் அந்த அதிகார வரம்பை மீறி கமிஷனர் கே.எஸ்.மெஹ்ரா நடக்கிறார்.
மாநகராட்சியில் பணிபுரியும் ‘ஏ’ கிரேடு அதிகாரி மாதாரோ மீது பல்வேறு லஞ்ச ஊழல் புகார்கள் இருந்தன.
அந்த புகார்களின் அடிப்படையில் மதாரோ மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமா என்பது பற்றி அரசு வழக்கறிஞரான வாகன்வதியின் கருத்தை மாநகராட்சி கேட்டது. அத்துடன் இந்த ஊழல் புகார் பற்றி விசாரிக்க ஒரு துணைக்குழுவை அப்போது மேயராக இருந்த கன்வர் செயின் அமைத்து இருந்தார்.
இந்த நிலையில் அந்த அதிகாரி மீது வழக்கு தொடர தன்னிச்சையாக கமிஷனர் கே.எஸ்.மெஹ்ரா அனுமதி வழங்கி உள்ளார். இது மாநகராட்சியின் அதிகாரத்தை ஆக்கிரமித்தது போன்றதாகும். இந்த அனுமதியை வழங்க அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. மாநகராட்சி மன்றத்தின் அனுமதியை பெறாமல் ‘ஏ’ கிரேடு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.
இவ்வாறு ஆர்த்தி மேரா கூறினார்.
இந்த பிரச்னை பற்றி ஆலோசிப்பதற்காக மாநகராட்சி உறுப்பினர்களின் அவசரக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் மெஹ்ராவை கண்டித்து அவை முன்னவர் சுபாஷ் ஆர்யா ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
‘ஏ’ கிரேடு அதிகாரியை பணியில் சேர்க்கவும், அவருக்கு பதவி உயர்வு அளிக்கவும் மற்றும் அவர் மீது மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி மன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்று மத்திய அரசு வழக்கறிஞர் கருத்து தெரிவித்துள்ளார்.
அப்படி இருக்கும்போது ‘ஏ’ கிரேடு அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கமிஷனர் தன்னிச்சையாக உத்தரவிட்டது அதிகார வரம்பு மீறல். இதை மாநகராட்சி வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நிருபர்களிடம் கமிஷனர் கே.எஸ்.மெஹ்ரா கூறுகையில், “இதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளன. அந்த விவரங்களை மாநகராட்சி கூட்டத்தில் தெரிவிப்பேன்” என்றார்.