தினமலர் 03.03.2010
ஏப்ரல் முதல் சென்ட்ரல் மார்க்கெட் புதிய இடத்தில் செயல்படும் மாநகராட்சி கமிஷனர் தகவல்
மதுரை : மதுரை மாநகராட்சி வருவாய் இனங்கள் நிலுவை வசூல் தொடர்பான ஆய்வுக் கூட்டம், கமிஷனர் செபாஸ்டின் தலைமையில் நடந்தது. தலைமை பொறியாளர் சக்திவேல், உதவி கமிஷனர் ஆர்.பாஸ்கரன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.கூட்டத்திற்குப் பின் கமிஷனர் கூறியதாவது:
நிலுவை வரியை வசூலிக்க, ஒவ்வொரு வார்டுக்கும் உதவி பொறியாளர் தலைமையிலான குழு தீவிர வசூல் செய்கிறது. மீனாட்சி பஜார், பாண்டி பஜார், பெரியார், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுகளில் உள்ள மாதாந்திர வாடகை கடைகளுக்கான நிலுவை தொகையும் வசூலிக்கப்படுகிறது. இவற்றுக்கு இந்த மாதத்துடன் உரிமம் முடிவதால், நிலுவை தொகையை செலுத்தினால் மட்டுமே அடுத்த ஆண்டிற்கு உரிமம் புதுப்பிக்கப்படும்.மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் மேற்கூரை அமைக்கும் பணி தற்போது நடக்கிறது. சாலை, குடிநீர், சாக்கடை வசதிகளும் இம்மாதத்திற்குள் அமைக்கப்பட்டு விடும். ஏப்ரல் முதல் வாரத்தில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மார்க்கெட்டை திறக்கிறார்.தற்போது சென்ட்ரல் மார்க்கெட்டில் உள்ள கடை உரிமையாளர்களுக்கே கடைகள் ஒதுக்கப்படும். தரைக்கடைக்காரர்களுக்கு டெபாசிட் தொகை, நிர்ணயம் செய்யப்பட்டு, அங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கே ஏலம் மூலம் கடைகள் ஒதுக்கப்படும். டெபாசிட் தொகை செலுத்தினால் மட்டுமே கடைகள் ஒதுக்கப்படும். கடை உரிமையாளர்களுக்கு, பிரச்னை ஏற்படாத வகையில், மாநகராட்சி மூலம் அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.