தினகரன் 05.08.2010
ஏரி, குளங்களில் கட்டப்படும் ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு மின் இணைப்பு தரக்கூடாது கலெக்டர் அறிவுரை
கூடுவாஞ்சேரி, ஆக.5: ஆக்கிரமிப்பை தடுக்க ஏரிக்கரையில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மின்இணைப்பு வழங்கக் கூடாது என கலெக்டர் சந்தோஷ் மிஸ்ரா கூறினார்.
நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்கான மனுநீதிநாள் கூட்டம், கூடுவாஞ்சேரி என்பிஆர் திருமண மண்டபத்தில் நடந்தது. கலெக்டர் சந்தோஷ் மிஸ்ரா தலைமை வகித்தார். அமைச்சர் அன்பரசன் முன்னிலை வகித்தார். குடிநீர், சாலை, பஸ் வசதி, வீட்டு மனைப்பட்டா உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, 3600 பேர் மனு கொடுத்திருந்தனர். ஏரி மற்றும் குளங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என ஊராட்சி தலைவர்கள் மனு கொடுத்தனர்.
பின்னர், கலெக்டர் பேசுகையில், ‘ஏரி மற்றும் குளம் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது ஆரம்பத்திலேயே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுடுகாடு, ஏரிக்கரையில் வீடு கட்டுபவர்களுக்கு மின்இணைப்பு வழங்கக் கூடாது. நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புறம்போக்கு நிலத்தை போலி பட்டா, போலி பத்திரம் தயாரித்து விற்பதாக ஏராளமான புகார்கள் வருகின்றன. அவர்கள், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள. ஊராட்சி தலைவர்கள் மற்றும் மக்கள் கொடுத்துள்ள மனுக்கள் மீது 20 நாளில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
28 பேருக்கு பட்டா, 25 பேருக்கு தலா ரூ.10,000 நலிந்தோர் குடும்பநல நிதி, 24 பெண்களுக்கு தலா ரூ.20,000 திருமண நிதியுதவி, தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள், விவசாயத் துறை சார்பில் உரம் மற்றும் விதைகள் ஆகியவற்றை அமைச்சர் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சிவராசு, கூடுதல் கலெக்டர் அனீஸ் சப்ரா, திருப்போரூர் எம்எல்ஏ மூர்த்தி, செங்கல்பட்டு தாசில்தார் வெங்கடேசன், பேரூராட்சி தலைவர் தண்டபாணி, துணைத் தலைவர் ஜார்ஜ், நகராட்சி துணைத் தலைவர் சண்முகம், ஒன்றிய துணைத் தலைவர் தேவேந்திரன், வருவாய் ஆய்வாளர் மணிவண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சர்தார் பேகம், பேரூராட்சி செயல் அலுவலர் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.