ஏரி சீரமைப்பு பணி: அமைச்சர் ஆய்வு
பெருமாள் ஏரி மற்றும் வெலிங்டன் ஏரிகள் ரூ.44.73 கோடி செலவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏரிகளை பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர்.
கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே உள்ள பெருமாள் ஏரியின் பிரதான கரை 16 கிலோ மீட்டரும், எதிர் கரையின் நீளம் 16.80 கிலோமீட்டர் நீளம் கொண்டது. ஏரியின் முழு நீர்மட்ட கொள்ளளவு 574 மில்லியன் கன அடி. 11 பாசன வாய்க்கால்கள் மூலம் 6,503 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரியில் 2 கலிங்குகள் மற்றும் உபரி நீர் போக்கிகள் உள்ளன.
11 பாசன வாய்க்கால்களின் கரைகளை உயர்த்தவும், உபரி நீர் போக்கி கரைகளை உயர்த்தவும் மொத்தம் ரூ.29.73 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.
இதுபோல் திட்டக்குடி அருகே வெலிங்டன் ஏரியும் தூர்வார திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. 2,580 மில்லியன் கன அடி கொள்ளவு கொண்ட இந்த ஏரி மூலம் 63 கிராமங்களில் 24,059 ஏக்கர் நிலம் பயனடைகிறது.
இந்த ஏரியில் 7 அடி உயரத்துக்கு மண் மேடு ஏற்பட்டுள்ளதால், தூர்வார திட்டமிட்டு ரூ.15 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் ஆர்.ஏமராஜ், எம்எல்ஏக்கள் சொரத்தூர் ராஜேந்திரன், எம்பிஎஸ்.சிவசுப்பிரமணியன், கடலூர் நகர் மன்ற தலைவர் சி.கே.சுப்பிரமணியன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வி.கந்தன் உள்ளிட்டோர் ஆய்வின்போது உடனிருந்தனர்.