தினமலர் 12.02.2010
ஏழைகளுக்கு வீடு: தமிழகம் முதலிடம் :ஸ்டாலின் பெருமிதம்
தாம்பரம் : “ஏழைகளுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தித் தருவதில் நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது.பிற மாநில முதல்வர்கள் பாராட்டும் வகையில் தமிழகத்தில் சிறப்பான திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன‘ என்று, துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சென்னை மாநகரை மேம்படுத்தும் பொருட்டு, ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்பு திட்டத்தின் கீழ், சென்னை மாநகர குடிசைவாழ் மக்களுக்காக பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் 1,113.33 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 23 ஆயிரத்து 864 அடுக்குமாடி குடியிருப்புகள்; சுனாமி ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக சென்னை மெரீனா திட்டப்பகுதியில் 132. 53 கோடி ரூபாய் செலவில் 2,280 அடுக்குமாடி குடியிருப்புகள்; 1.26 கோடி ரூபாய் செலவில் செம்மஞ்சேரி புதிய பஸ் நிலையம் ஆகிய திட்டங்களின் துவக்க விழா சென்னையை அடுத்த செம்மஞ் சேரியில் நேற்று நடந்தது.
இவ்விழாவில், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை செயலர் அ�ஷாக் டோங்ரே வரவேற்றார்.திட்டங்களை துவக்கி வைத்து துணை முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,”உணவு, உடை, இருப்பிடம் இந்த மூன்றும் இருந்தால் தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்பதை அறிந்து, புரிந்து அதற்கேற்ற வகையில் செயல்பட்டு வரும் ஆட்சி தான் தி.மு.க., ஆட்சி.
முதல்வர் கருணாநிதி, கடந்த 1971ம் ஆண்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கினார். இதன் தொடர்ச்சியாக, பல அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.இந்த திட்டம் நகர்புறத்தில் மட்டுமே பயன்படக்கூடாது என் பதை கருத்தில் கொண்டு கிராமப் புறங்களிலும் தொகுப்பு வீடுகள் என்ற திட்டம் துவக்கப்பட்டு அதுவும் தொடர்ந்து நடந்து வருகிறது.தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் துவக்கப்பட்டு 36 ஆண்டுகளில், 77 ஆயிரத்து 627 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. ஆனால், இந்த ஐந்து வருடத்தில் 82 ஆயிரம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு 42 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.தற்போது, 26 ஆயிரத்து 144 வீடுகள் கட்டப்பட்டவுள்ளன. ஏழைகளுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தித் தருவதில் நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது.மற்ற மாநில முதல்வர்கள் பாராட்டும் வகையில் தமிழகத்தில் சிறப்பான திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன‘ என்றார்.விழாவில், அமைச்சர்கள் சுப. தங்கவேலன், அன்பரசன், சென்னை மேயர் சுப்ரமணியம், தாம்பரம் எம்.எல்.ஏ., எஸ்.ஆர். ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.