தினகரன் 24.11.2010
ஏழைகள் வீடு ஒதுக்கீடு கொள்கை ஆராய உயர்நிலை குழு அமைப்பு
புதுடெல்லி,நவ.24: ஏழைகளுக்காக கட்டப்பட்டுள்ள சுமார் 9,000 வீடுகளை குடிசைவாசிகளுக்கு ஒதுக்குவது தொடர்பான கொள்கைகளை வகுப்பதற்காக 3 அமைச்சர்கள் கொண்ட உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு டெல்லியின் லட்சுமி நகரில் உள்ள 5 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 70 பேர் பலியாயினர். இதில் இருந்தவர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள். இதன் மூலம், கூலித் தொழிலாளர்களின் குடும்பங்கள் குடியிருக்க இடம் இன்றி படும் கஷ்டங்கள் அம்பலத்துக்கு வந்தன.
நரேலா, துவாரகா, போர்கர், பாவனா ஆகிய பகுதிகளில் மாநில அரசின் சார்பில் சுமார் 9,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. குறைந்த விலையில் கட்டப்பட்டுள்ள இந்த வீடுகளை ஒதுக்கும் பணியை விரைவுபடுத்துவது தொடர்பாக முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
ஏழைகள் வீடு ஒதுக்கீடு கொள்கை வகுப்பதற்காக உயர்நிலை குழுவை அமைப்பது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, நிதியமைச்சர் ஏ.கே.வாலியா, பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜ்குமார் சவுகான், சமூக நலத்துறை அமைச்சர் மங்கத்ராம் சிங்கால் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் ராகேஷ் மேத்தா தயாரித்துள்ள வரைவு கொள்கையை ஆராய்ந்து இக்குழுவினர் இறுதி செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மங்கத்ராம் சிங்கால் கூறுகையில், ‘’இப்போது சுமார் 9,000 வீடுகள் தயார் நிலையில் உள்ளன. இது தவிர இன்னும் 6 மாத காலத்துக்குள் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மூலம் மேலும் 7,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுவிடும். இதன் மூலம் ஏழைகளுக்கான மொத்த வீடுகளின் எண்ணிக்கை 15,000 ஆக உயரும்” என்றார்.