தினமலர் 20.04.2010
ஒகேனக்கல் குடிநீர் திட்டம்: அமைச்சர் டில்லி விரைவு
பெங்களூரு:”ஒகேனக்கல் பிரச்னை குறித்து, மத்திய நீர்பாசன துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த, கர்நாடகா அமைச்சருடன் அதிகாரிகள் குழு இன்று டில்லி செல்கிறது,” என, கர்நாடகா நீர்பாசன துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறினார்.பெங்களூருவில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ”ஒகேனக்கல் பிரச்னை குறித்து, தமிழக அரசுடன் மூன்று முறை பேசினோம். இருந்த போதிலும், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டப்பணி நடத்துவதில், தமிழகம் அடாவடித்தனம் செய்து வருகிறது. இது பற்றி மத்திய அரசிடம் கூற முடிவு செய்துள்ளோம்.”மத்திய நீர்பாசனத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, நாளை (இன்று) என் தலைமையில் கர்நாடகா அதிகாரிகள் குழு டில்லி செல்கிறோம். ஏற்கனவே இது தொடர்பாக மத்திய அரசிடம் மனு கொடுத்துள்ளோம். ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அந்த பகுதி எங்கள் நிலம் என்று தான் கூறுகிறோம்,” என்றார்.