ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் ஓசூர் நகரை வந்தடைந்தது பொதுமக்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் ஓசூர் நகரை வந்தடைந்தது. தாகம் தீர்க்க வந்த காவிரி நீரை பொதுமக்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்றனர்.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்
கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 2 மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.1,900 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மடத்தில் இருந்து தண்ணீர், மூங்கில்பட்டி பம்பிங் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து மகேந்திரமங்கலம், காடுசெட்டிப்பட்டி, உள்ளுகுறுக்கை, ஜக்கேரி, குந்துமாரனப்பள்ளி வழியாக ஓசூர் தின்னூர் வருகிறது.
தற்போது குழாய்கள் பதிக்கும் பணி முடிவு பெற்றுள்ளது. இதையடுத்து ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் சோதனை ஓட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இதன்படி, நேற்று முன்தினம் இரவு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் சோதனை ஓட்டமாக ஓசூரை வந்தடைந்தது. இரவு 8 மணி அளவில் இந்த காவிரி நீர் ஓசூருக்கு வந்தது.
ஓசூர் மக்கள் வரவேற்பு
ஓசூர்தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள ஆர்.சி.தேவாலயம் அருகில், ரெயில்வே பாலம் அருகில் உள்ள குழாயில், நுரை பொங்கியவாறு காவிரி நீர் வந்தது. இதை பார்த்து ஓசூர் நகர மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில், ஓசூர் நகராட்சி தலைவர் பாலகிருஷ்ணரெட்டி, அ.தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் சர்வேஷ், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட மேற்பார்வை பொறியாளர் மோகனசுந்தரம், ஓசூர் நிர்வாக பொறியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
120 லட்சம் லிட்டர் தண்ணீர்
கடல்மட்டத்தில் இருந்து 700 மீட்டர் உயரத்தில் உள்ள ஓசூர் நகருக்கு காவிரி நீர் சோதனை ஓட்ட முறையில் வந்துள்ளது. ஒகேனக்கல்லில் இருந்து ஓசூர் தின்னூர் வரை குழாய்கள் அமைக்கப்பட்டுள்ள தூரத்தின் அளவு 112 கிலோ மீட்டர் ஆகும். இதன்மூலம் ஓசூர் நகருக்கு நாள் ஒன்றுக்கு 120 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும்.
அடுத்ததாக 1,245 மீட்டர் உயரத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை தாலுகா பெட்டமுகிலாளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணி நடக்கிறது. இதற்காக ஒகேனக்கல்லில் இருந்து 150 மீட்டர் உயரத்தில் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
சூளகிரிக்கு வந்தது
இதையடுத்து நேற்று காலை ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் சூளகிரியை வந்தடைந்தது. சூளகிரி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு வினியோகிக்க பைபாஸ் சாலையில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் சூளகிரி, தியாகரசனப்பள்ளி, சாமனப்பள்ளி, உல்லட்டி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படும். எனவே, அந்த பகுதி மக்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.