தினமணி 17.09.2010
ஒசூர் நகராட்சியைக் கண்டித்து மூக்கண்டப்பள்ளி ஊராட்சி தீர்மானம்
ஒசூர், செப். 16: ஒசூர் நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்கும் நகராட்சியின் செயல்பாட்டுக்கு மூக்கண்டப்பள்ளி ஊராட்சி எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஒசூர் நகராட்சியைச் சுற்றி 5 கி.மீ. தொலைவில் உள்ள ஊராட்சிகளை ஒசூர் நகராட்சியுடன் இணைத்து ஒசூர் நகராட்சியை மாநகராட்சியாக அறிவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளாட்சித் துறைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு இனங்க ஒசூர் நகராட்சியின் அவசரக் கூட்டம் செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற்றது.
இதில் அரசு அறிவித்த சூசூவாடி, மூக்கண்டப்பள்ளி, சென்னத்தூர், ஆவளப்பள்ளி ஆகிய 4 ஊராட்சிகள் மற்றும் மத்திகிரி பேரூராட்சி ஆகியவற்றுடன் கூடுதலாக பேரண்டப்பள்ளி, பேகேப்பள்ளி, கொத்தகொண்டப்பள்ளி, தொரப்பள்ளி, ஒன்னல்வாடி ஆகிய 5 ஊராட்சிகளையும் சேர்த்து மொத்தம் 10 உள்ளாட்சிப் பகுதிகளை ஒசூர் நகராட்சி எல்லை விரிவாக்கத்தில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து மூக்கண்டப்பள்ளி ஊராட்சியில் வியாழக்கிழமை அவரசக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சித் தலைவர் வெங்கட்ரெட்டி, துணைத் தலைவர் பி.ஆர்.வேலு மற்றும் அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒசூர் நகராட்சியின் செயல்பாட்டை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது