தினகரன் 26.05.2010
கடைகள், ஓட்டல்களில் தமிழில் பெயர் பலகை வைக்க ஒருவாரம் கெடு
காஞ்சிபுரம், மே 26: இந்த மாத இறுதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள், ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பது குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி சிவராசு தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ‘மாவட்டம் முழுவதும் உள்ள கடைகள், நிறுவனங்கள், ஓட்டல்களில் தமிழ் மொழியில் பெரிய அளவில் பெயர் பலகைகள் கட்டாயம் வைக்க வேண்டும். இந்த மாத இறுதிக்குள் தமிழில் எழுதப்பட்டிருக்க வேண்டும். தமிழில் பெயர் பலகை வைக்காத கடை உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் விதி 15 (1) மற்றும் தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் விதி 42 (ஆ) ஆகியவற்றின்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.