தினமலர் 29.04.2010
கடையநல்லூர் நகராட்சி கூட்டம்
கடையநல்லூர் : கடையநல்லூர் நகராட்சி கூட்டம் நடந்தது.
கடையநல்லூர் நகராட்சி கூட்டம் நேற்று மாலை தலைவர் இப்ராகிம் தலைமையில் நடந்தது. கமிஷனர் அப்துல்லத்தீப், இன்ஜினியர் அய்யனார், சுகாதார அலுவலர் கணேசமூர்த்தி, மேலாளர் ஆறுமுகம், இளநிலை பொறியாளர் அகமதுஅலி, வருவாய் ஆய்வாளர் மகேஸ்வரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:- ராமநாதன்:- நகராட்சியில் தமிழக அரசின் இலவச காஸ் அடுப்பினை பாரபட்சமின்றி வழங்கிட வேண்டும். 10 அடுப்புகள் கொடுத்தால் என்ன செய்ய முடியும்.
அப்துல்காதர்:- இலவச காஸ் அடுப்பும் முறையாக வழங்கிட வேண்டும்.
அகிலேஸ்வரி:- எங்கள் பகுதிகளில் குடிநீர் கேட்டு எத்தனையோ முறை தெரிவித்தும் எந்த பலனும் இல்லை. டெண்டர் விட்டும் குடிநீருக்கான பணிகள் நடத்தப்படவில்லை.
தலைவர்:- இளநிலை பொறியாளரை சம்பந்தப்பட்ட பகுதிக்கு விசிட் செய்ய சொல்லப்பட்டுள்ளது. கூட்டம் முடிந்த பிறகு இதுகுறித்து பேசலாம்.
சாகுல்கமீது:- தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் குறிப்பிட்ட பகுதிகளுக்கான திட்டமாக உள்ளது. வருகின்ற தண்ணீரை முறையாக வினியோகம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
தலைவர்:- 33 வார்டுகளுக்கும் தாமிரபரணி தண்ணீர் சரிவர கிடைக்கவில்லை என்ற குறைபாடு உள்ளது. இதனை விரைந்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
ராமநாதன்:- தாமரபரணி தண்ணீரை பயன்படுத்தாமல் பல பகுதிகளில் மக்கள் இருந்து வரும் போதிலும் அதற்கான பணத்தை மக்கள்தான் கட்டும் நிலை உள்ளது.
சரஸ்வதி:- கவுன்சில் அரங்கில் கூட்டம் போடாமல் பொது பிரிவில் வைத்து கூட்டம் போட்டுள்ளது ஏன்?
தலைவர்:- கவுன்சில் அரங்கில் தமிழக அரசின் இலவச கலர் ‘டிவி‘ வைக்கப்பட்டுள்ளது. 8 ஆயிரம் ‘டிவி‘கள் வரப்பட்டுள்ளதாக வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ராமநாதன்:- நகராட்சி பகுதிக்கு 8 ஆயிரம் ‘டிவி‘கள் எல்லாம் போதாது. இதனை வழங்கினால் பிரச்னைதான் வரும்.
தலைவர்: இன்னும் 4 ஆயிரம் ‘டிவி‘கள் வரலாம் என்கின்றனர். இருந்தபோதிலும் நகராட்சி பகுதியில் எல்லோருக்கும் ‘டிவி‘ வழங்கினால்தான் சிறப்பாக இருக்கும்.
ராமநாதன்:- அப்படியென்றால் 21 ஆயிரம் ‘டிவி‘கள் வேண்டும்.
தலைவர்:- 33 வார்டுகளுக்கும் ‘டிவி‘கள் வழங்க வேண்டும். 20 ஆயிரம் ‘டிவி‘களாவது வேண்டும். 12 ஆயிரம் ‘டிவி‘கள் தான் என்றால் திரும்பி எடுத்து செல்ல கூறி விடலாம்.
அப்துல்காதர்:- அனைவருக்கும் ‘டிவி‘ வந்தபிறகு வினியோகம் செய்தால் போதும்.
தமிழ்செல்வி:- தொடர்ந்து எனது வார்டு புறக்கணிக்கப்பட்டு வருகிறது. குடிநீர் வினியோகம் சரிவர இல்லாமல் மக்கள் பெரும் அவதிபட்டு வருகின்றனர்.
தலைவர்:- கூட்டம் முடிந்தபிறகு 21 முதல் 27 வார்டுகள் வரையிலான குடிநீர் பிரச்னை தீர்வு குறித்து பேசலாம்.
கருப்பையா:- கடந்த சில மாதங்களுக்கு முன் கடையநல்லூரில் காணப்பட்ட காய்ச்சலுக்கு 35 பேர் பலியாயினர். இந்தகால கட்டத்தில் நகராட்சி சார்பில் வாங்கப்பட்ட பிளீச்சிங் பவுடரில் பெரும் ஊழல் நடந்துள்ளது. இது பிளீச்சிங் பவுடர்தானா என்பதில் சந்தேகம் உள்ளது.
கையில் கொண்டு வந்த பவுடரை தலைவர் மற்றும் சுகாதார அலுவலரிடம் கவுன்சிலர் கருப்பையா காட்டினார். தொடர்ந்து அதிகாரிகள் இது தொடர்பான விளக்கத்தினை கவுன்சிலரிடம் தெரிவித்தனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் சிலர் கடையநல்லூரில் குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்கு தமிழக அரசு 21 கோடி ரூபாய் அனுமதித்துள்ளதற்கு பாராட்டுதலை தெரிவித்து பேசினர். இவ்வாறு விவாதம் நடந்தது.