தினமலர் 23.03.2010
கடையநல்லூர் பாப்பாங்கால்வாயில் ஏப்ரல் முதல் வாரத்தில் ஆக்ரமிப்பு அகற்றம் : தென்காசி ஆர்.டி.ஓ.அறிவிப்பு
தென்காசி : ‘கடையநல்லூர் பாப்பாங்கால்வாயில் வரும் ஏப்ரல் முதல் வாரம் ஆக்ரமிப்பு அகற்றப்படும்‘ என தென்காசி ஆர்.டி.ஓ.மூர்த்தி கூறினார்.
கடையநல்லூர் வழியே செல்லும் பாப்பாங்குளம் கால்வாயில் ஆக்ரமிப்புகள் அதிகளவில் உள்ளன. இதனால் இந்த கால்வாய் மூலம் பாசனம் பெறும் விவசாயிகள் போதிய தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். மேலும் மழை காலங்களில் கால்வாயில் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்து விடுவது வாடிக்கையாகி விட்டது. இதனை தவிர்க்க ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் கால்வாயில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தென்காசி ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் நடந்தது. ஆர்.டி.ஓ.மூர்த்தி தலைமை வகித்தார். புளியங்குடி டி.எஸ்.பி.பாஸ்கரன், தென்காசி தாசில்தார் பரமசிவன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து ஆர்.டி.ஓ.மூர்த்தி கூறியதாவது: ”கடையநல்லூர் பாப்பாங்கால்வாயில் 6 கி.மீ.ஆக்ரமிப்பு உள்ளது. இதில் 2 கி.மீ.தூரம் சுமார் 260 கட்டடங்கள் முழுமையான ஆக்ரமிப்பில் கட்டப்பட்டுள்ளன. சில கட்டடங்கள் பகுதி ஆக்ரமிப்பில் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டடங்கள் கடையநல்லூர், மாவடிக்கால் பகுதியில் கால்வாயை ஆக்ரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளது. இந்த ஆக்ரமிப்புகளை அகற்றும் பணி ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆக்ரமிப்பு செய்திருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. ஆக்ரமிப்பு அகற்றும் பணி குறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். ஆக்ரமிப்பு அகற்றப்படும் போது போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்படும். மருத்துவ குழுவினர், தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் இருப்பர்” என்று ஆர்.டி.ஓ.மூர்த்தி கூறினார்.
கூட்டத்தில் வீரகேரம்புதூர் தாசில்தார் மணிபாபு, தென்காசி மண்டல துணை தாசில்தார் சுமங்கலி, துணை தாசில்தார் பீட்டர், கடையநல்லூர் உதவி பொறியாளர் மணிகண்டராஜன், நகரமைப்பு ஆய்வாளர் அப்துல்காதர், நகரசார் ஆய்வாளர் வேலுச்சாமி, தென்காசி வட்டார துணை ஆய்வாளர் செய்யதுஉமர், கடையநல்லூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முத்தையா, ஆர்.ஐ.ஆதிநாராயணன், வி.ஏ.ஓ.கள் கடையநல்லூர் பாலசுப்பிரமணியன், கிருஷ்ணாபுரம் இசக்கிதுரை, வைரவன்குளம் சண்முகவேலு, கம்பனேரி புதுக்குடி நல்லகண்ணு, கடையநல்லூர் எம்.எல்.ஏ.உதவியாளர் செல்வராஜ் கலந்து கொண்டனர்.