தினமணி 10.09.2014
கட்டடம் இடிந்து மூவர் பலியான சம்பவம்: செங்கோட்டை நகராட்சிப் பொறியாளர் உள்பட இருவர் பணியிடை நீக்கம்
செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தின் முன்புறம் உள்ள சேதமடைந்த வணிக வளாகத்தின் முதல்தளத்தை இடித்து அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சேதமடைந்த கட்டடங்களை இடிப்பதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, அந்தப் பணி செங்கோட்டை வீரகேரளவிநாயகர் தெருவைச் சேர்ந்த கனி என்பவரது மனைவி பாத்திமுத்து என்பவருக்கு வழங்கப்பட்டு, கடந்த 20 நாள்களுக்கு மேலாக கட்டடங்களை இடிக்கும் பணி நடந்து வந்தது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை பிற்பகலில் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, முதல் தளத்தின் சுவர் இடிந்து விழுந்ததில், தொழிலாளர்கள் கணபதி, முத்துகுமார், ராஜு ஆகியோர் இறந்தனர். இது தொடர்பாக ஒப்பந்ததாரர் பாத்திமுத்து மற்றும் நாகூர் ஆகியோர் மீது செங்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக நகராட்சிப் பொறியாளர் ரமேஷ், பணி மேற்பார்வையாளர் அனந்தராமகிருஷ்ணன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிர்வாக ஆணையர் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.