கணித மேதை ராமானுஜன் வீட்டில் அருங்காட்சியகம்!
கணித மேதை ராமானுஜன் பிறந்த வீட்டில் கணித அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளதற்காக, ஈரோடு மாநகராட்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் என்.மணி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: கணித மேதை ராமானுஜன் பிறந்த வீட்டை அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும், அவர் வீடு இருக்கும் தெருவுக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கணித மேதை ராமானுஜன் பிறந்த இடத்தில் கணித அருங்காட்சியகம் அமைக்க கருத்துரு அனுப்ப உள்ளதாக மார்ச் 27-ல் நடந்த ஈரோடு மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக ஈரோடு மேயர் ப.மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி, மாநகராட்சி ஆணையர் மு.விஜயலட்சுமி மற்றும் மன்ற உறுப்பினர்களுக்கும் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஈரோட்டில் ராமானுஜன் பிறந்த வீட்டை பார்வையிட ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் பலர் வந்து செல்கின்றனர். ராமானுஜனின் 125-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு 2012-ம் ஆண்டு தேசிய கணித ஆண்டாக அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் கணிதமேதை பற்றிய ஆவணப்படத்தை எடுத்தது. மராத்தி இயக்குநர் நந்தன் பகோடியா இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஈரோட்டில் படப்பிடிப்பு நடந்தபோது மிகுந்த சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில் மாநகராட்சியின் இந்த அறிவிப்பால் கணித, அறிவியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.