கண்ணம்மாபேட்டையில் தெரு நாய்கள் சரணாலயம்: மேயர் ஆய்வு
தெரு நாய்களுக்கான சரணாலயம் கண்ணம்மாபேட்டையில் அமைக்கப்பட உள்ள இடத்தை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மநாகராட்சிப் பகுதிகளில் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் தெரு நாய்களுக்கும், வயதான நோய்த்தொற்றுள்ள தெரு நாய்களுக்கு சரணாலயம் அமைக்கப்படும் என்று மாநகராட்சியின் 2013 – 2014-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
மேலும், வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் இறந்த பின்பு அவற்றை அடக்கம் செய்யவும் செல்லப் பிராணிகளுக்கான மயான பூமி அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட 141-வது வார்டில் உள்ள கண்ணம்மாபேட்டை மயானபூமி பின்புறத்தில் 35 ஆயிரம் சதுர அடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தில் அமைக்கப்பட உள்ள நாய்கள் சரணாலயத்தில் 2 ஆயிரம் வயதான மற்றும் நோயுற்ற தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி மற்றும் இனக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்படும். இது தவிர, உணவு வழங்கி பராமரிக்கப்படும். சரணாலயம் அமைப்பதற்கான பணிகளை விரைவாக முடிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மேயர் சைதை துரைசாமி உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, மாநகராட்சிஆணையர் விக்ரம் கபூர், துணை ஆணையர் சி.என்.மகேஷ்வரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.