தினமணி 26.10.2010
கன்னிவாடியில் பஸ் நிலையம் கட்ட இடம்: அமைச்சர் ஆய்வு
திண்டுக்கல், அக். 25: கன்னிவாடி பேரூராட்சியில் ரூ. 60 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான இடத்தை மாநில வருவாய் மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சர் இ.பெரியசாமி திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
கன்னிவாடி வழியாக தினமும் சுமார் 610 பஸ்கள் வந்து செல்கின்றன. கன்னிவாடி பகுதியில் சுமார் 1,200 பயணிகள் பஸ்களைப் பயன்படுத்துகின்றனர். எனவே இப்பகுதியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புதிய பஸ் நிலையம் கட்ட அரசு முடிவு செய்தது.
செம்பட்டி – ஒட்டன்சத்திரம் சாலையில் கால்நடைத் துறைக்குச் சொந்தமான 2.75 ஏக்கர் நிலத்தில் சுமார் 1.5 ஏக்கர் நிலத்தை மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் நிதியில் இருந்து கே.பி.ராமலிங்கம் ரூ. 20 லட்சம் வழங்கி உள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் பஸ் நிலையம் கட்டுவதற்காக அமைச்சர் இ.பெரியசாமி பார்வையிட்டு பணிகளைத் துவங்க உத்தரவிட்டார்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கா.பேச்சியம்மாள், கோட்டாட்சியர் ராமசாமி, வட்டாட்சியர் குமாரசாமி, கன்னிவாடி பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் ஆகியோர் உடனிருந்தனர்.