கருணை வேலை வழங்கும் போது ஆண், பெண் பாகுபாடு கூடாது ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: கருணை வே லை வழங்குவதில் ஆண், பெண் பாகுபாடு பார்க்க கூடாது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் ஒரத்தநாடு செம்மண்கோட்டையை சேர்ந்த சுதா (28), ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: என் தந்தை மதியழ கன் தலையாரியாக 14 ஆண்டு பணிபுரிந்து வந்தார்.
கடந்த 2011ல் பணியில் இருந்த போது இறந்தார். என் தந்தைக்கு நான் உட்பட இரு மகள்கள். நான் கருணை வேலை கேட்டு விண்ணப்பித்தேன். எனக்கு என் தந்தை இறப்புக்கு முன்பே திருமணமாகி விட்டதால் கருணை வேலை வழங்க மறுத்து மனுவை நிராகரித்து உத்தரவிட்டனர். அந்த உத்தரவை ரத்து செய்து, கருணை வேலை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்து நீதிபதி ஹரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: கருணை வேலை வழங்கும் உத்தரவு திருமணமான ஆணுக்கு மட்டும் பொருந்தும், திருமணமான பெண்ணுக்கு பொருந்தாது என்பது சரியல்ல. பெற்றோர் மற்றும் மூத்தோர் நலன் மற்றும் பாதுகாப்பு சட்டப்படி பெற்றோரை பாதுகாக்க வேண்டிய சம பொறுப்பு ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு உண்டு.
அந்த பெற்றோர் இறக்கும் போது, கருணை வேலை கேட்கும் போது ஆண், பெண் பாகுபாடு காட்டுவதை ஏற்க முடியாது. இறந்த பெற்றோரின் கருணை வேலையை கேட்கும் போது, முன்கூட்டியே திருமணமானதால் மகளுக்கு கருணை வேலை தர முடியாது என்பதை ஏற்க முடியாது.
மனுதாரருக்கு வேலை தர முடியாது என பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு எட்டு வாரத்தில் கருணை வேலை வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.