தினமலர் 14.09.2010
கரூரை மாநகராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கை : அவசர கூட்டத்தில் தீர்மானம்
கரூர்: கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தக்கோரி, மாநில அரசுக்கு கருத்துரு அனுப்ப, அவசர கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கரூர் நகராட்சி அவசர கூட்டம் பெத்தாச்சி மன்றத்தில், தலைவர் சிவகாமசுந்தரி தலைமையில் நடந்தது. கமிஷனர் உமாபதி, துணை தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தனர். உள்ளாட்சி அமைப்புகளின் நிலை உயர்த்துதல், சேர்த்தல் தொடர்பான நடைமுறைகள் பற்றிய அரசு ஆணையில், “ஒரு நகராட்சியை முழுவதாகவோ, அதன் ஒரு பகுதியையோ, அருகில் உள்ள நகராட்சி, பஞ்சாயத்துகளையோ இணைத்து மாநகராட்சியாக உருவாக்கலாம்‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு முடிவெடுக்கும்போது தற்போது பதவி வகிக்கும் உறுப்பினர்கள், தலைவர் பதவிக்காலம் முடியும் வரை பாதிக்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நகராட்சிகளின் தரம் உயர்த்தல் குறித்து அரசுக்கு செயற்குறிப்பு அளிக்க கலெக்டர் மூலமாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட உள்ளாட்சியில் மக்கள் தொகை அடர்த்தி, தனிநபர் வருவாய், விவசாயிகளின் சதவீதம், உள்ளாட்சி ஆண்டு வருமானம் கணக்கிட்டு, இணைக்க வேண்டிய உள்ளாட்சி குறித்தும் கோரப்பட்டிருந்தது. இனாம் கரூர் நகராட்சி (தேர்வு நிலை) 13.5 சதுர கி.மீ., தாந்தோணி நகராட்சி (முதல்நிலை) 26.63 சதுர கி.மீ., சணப்பிரட்டி பஞ்சாயத்து 5.58 சதுர கி.மீ., ஆகியவற்றை கரூர் நகராட்சியுடன் இணைத்து, கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்த அரசுக்கு செயற்குறிப்பு அளிக்க அவசர கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.கவுன்சிலர் வடிவேல்(தி.மு.க.,): அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சிளுடன் காதப்பாறை மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்சாயத்தையும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ள முதல்வர் மற்றும் துணைமுதல்வருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள் முத்துசாமி, கமலா, நெடுஞ்செழியன், வளர்மதி ஆகியோர், தலைவர் இருக்கை முன் எதிர்த்து கோஷமிட்டனர். தொடர்ந்து, தி.மு.க., -அ.தி.மு.க., கவுன்சிலர்களிடையே காரசாரமான வாக்குவாதம் எழுந்தது.
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கூறியதாவது: கடந்த நான்கு ஆண்டுகளாக, கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த சட்டசபையில் கரூர் எம்.எல்.ஏ., செந்தல்பாலாஜி கோரிக்கை விடுத்துவருகிறார். இந்நிலையில், அவருக்கு நன்றி தெரிவிக்கப்படவில்லை. கரூர் மாநகராட்சியாக தரம் உயர்வதை நாங்கள் ஆதரிக்கிறோம். அதேசமயம், பகுதி மக்கள் பாதிக்கப்படாத வகையில் இந்த நடவடிக்கை இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.