தினமணி 12.08.2010
கரூர் நகராட்சியில் சாலை அபிவிருத்தி திட்டக் கூட்டம்
கரூர், ஆக.11: கரூர் நகராட்சியில் சாலை அபிவிருத்தி திட்டக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கரூர் நகர்மன்ற பெத்தாட்சி மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் பி. சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் பி. கனகராஜ், ஆணையர் ஜி. உமாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நகராட்சி நிர்வாக இயக்குநரிடமிருந்து பெறப்பட்ட கடிதம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அக்கடிதத்தில் இயற்கைச் சீற்றம், புதைச் சாக்கடைத் திட்டம், குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் இதரப் பணிகளால் பழுதடைந்த சாலைகளைச் சீரமைக்கும் பொருட்டு சிறப்புச்சாலை அபிவிருத்தி திட்டம் 2010-11 செயல்படுத்தப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் கரூர் நகராட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய சாலைகள் குறித்து கேட்கப்பட்டிருந்த கருத்துரு குறித்து விவாதிக்கப்பட்டது.
இதன்படி, சேதமடைந்த சாலைகளை வார்டு வாரியாக ஆய்வு செய்து சீரமைப்பது என்றும், இதை வரும் நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆக.25-க்குள் அரசுக்கு அனுப்பிவைப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.