கலசலிங்கம் மாணவர்களின் காற்றாலை மின் உற்பத்தி வடிவமைப்புக்கு மத்திய அரசு காப்புரிமை
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக இயந்திரவியல் மாணவர்கள் வடிவமைத்துள்ள மினி காற்றாலைக்கு மத்திய அரசின் காப்புரிமை கிடைத்துள்ளது. மேலும் மாணவர்களின் வடிவமைப்பைப் பாராட்டி, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பக் கழகம் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கியுள்ளது.
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு இயந்திரவியல் படிக்கும் மாணவர்கள் பி.அழகு ராஜேஸ்வரன், பி.ஆனந்த்குமார், என்.அனீஸ் சிவராம், ஏ.ராஜகோபால் ஆகியோர் பேராசிரியர் எஸ். ராஜகருணாகரன் தலைமையில், பேராசிரியர் மோதிலால் ஆலோசனையின் பேரில் எலெக்ட்ரிக் காரில் மேல்கூரையில் மினி காற்றாலை (ரண்ய்க் ம்ண்ப்ப்) ஒன்றை உருவாக்கி, பேட்டரி சார்ஜ் குறைந்தவுடன் காருக்கு மின்சாரத்தை மின் காற்றாலை மூலம் உற்பத்தி செய்து அதில் செலுத்தி காரின் பேட்டரி மின்சாரம் குறையாமல், கார் தங்கு தடையின்றி செல்லும் வகையில் வடிவமைப்பு செய்திருந்தனர். இந்த மினி காற்றாலை 120 வோல்ட் பேட்டரியை சார்ஜ் ஏற்றுவதற்கு பயன்படுத்தலாம். காற்றின் வேகம், கார் செல்லும்போதே கிடைக்கும். கார் வேகம் மணிக்கு 30 கி.மீ. இருக்கும் போது மினி காற்றாலை இயங்கி மின்சார உற்பத்தி ஏற்படுத்தி பேட்டரிக்குச் செலுத்தும். இதை செய்வதற்கு ரூ.25 ஆயிரம் செலவு ஆகியுள்ளது.
இந்த வடிவமைப்பு தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்பக் கழகம் நடத்திய போட்டிக்கு அனுப்பப்பட்டது. இப் போட்டியில் பங்கு பெற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில், கலசலிங்கம் மாணவர்களின் இந்த வடிவமைப்புக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 ஆயிரம் நிதியுதவியும் பாராட்டு சான்றிதழும் கிடைத்துள்ளது.
மேலும் இந்த வடிவமைப்புக்கு மத்திய அரசு வணிகவியல், தொழிற்துறை சார்பில் காப்புரிமையும் கிடைக்கப்பெற்றுள்ளது.
மத்திய அரசின் காப்புரிமை மற்றும் மாநில அரசின் பாராட்டு பெற்ற மாணவர்களை பல்கலைக்கழகத்தின் நிறுவனத் தலைவர் தி.கலசலிங்கம், வேந்தர் க.ஸ்ரீதரன், துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன் துறைத் தலைவர் டீன் எஸ்.ராஜகருணாகரன் உள்ளிட்டோர் பாராட்டினர்.