தினமணி 14.12.2009
கலப்பட, காலாவதியான பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை : ஆணையர்
திருச்சி, டிச. 13: திருச்சி மாநகரப் பகுதிகளில் காலாவதியான பொருள்கள், கலப்படப் பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி உறுதிபடத் தெரிவித்தார்.
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்டோர் பேசியது:
பயனீட்டாளர் சங்கத் தலைவர் சகுந்தலா சீனிவாசன்: மாநகராட்சிப் பகுதியில் வசித்தும், வாக்காளர் பட்டியிலில் இருந்தும், அடையாள அட்டை இல்லாத நபர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். வணிக நிறுவனங்களில் பாக்கெட் செய்து விற்பனை செய்யும் பொருள்களில் உற்பத்தி மற்றும் காலாவதி விவரங்களை குறிப்பிடாத பொருள்களை உணவு ஆய்வாளர் மூலம் பறிமுதல் செய்ய வேண்டும். தென்னூர் பாலத்தின்கீழ் சிறு பூங்கா அமைத்துக் கொடுத்தால் பராமரிக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்கிறோம்.
தென்னக நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைக் கழகத் தலைவர் மோகன்: பொது இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கை தொடர வேண்டும். வயலூர் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரக் கேடுகளை விளைவிக்கும் தெரு ஓரக் கடைகளை அகற்ற வேண்டும்.
தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்புச் செயலர் எம். சேகரன்: ரஞ்சிதபுரம் மழைநீர் வடிகால் போதுமானதாக இல்லை. கூடுதலாக வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறை சாலைகளை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். காலிமனைகளில் மழைநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுத்த காரணமாக உள்ள உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வரகனேரி– முஸ்லிம் தெரு பகுதிகளில் இன்னும் புதை சாக்கடை இணைப்புப் பெறாமல் மனிதக் கழிவுகளை மழைநீர் வடிகால்களில் வெளியேற்றுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்புக் குழுவின் செயலர் எஸ். புஷ்பவனம்: புதிதாகச் சேர்க்கப்பட்ட பகுதிகளுக்கு புதைசாக்கடைத் திட்டம் செயல்படுத்த வேண்டும். இந்த வடிகாலில் மனிதர்கள் நுழையும் பகுதி ஒரே சீராக அமைக்கப்பட வேண்டும். அண்ணா நகர் இணைப்புச் சாலையை துரிதமாக முடிக்க வேண்டும்.
மத்திய பேருந்து நிலையத்தில் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும். தெப்பக்குளம் நந்திகோயில் தெருவில் ஆக்கிரமிப்பு தெய்யப்பட்டுள்ள பழக்கடைகள் மற்றும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் செல்லும் வழியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தென்னூர் கேஎம்சி மருத்துவமனையை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். காந்திமார்க்கெட் பகுதியில் உள்ள சில கடைகளில் நல்லெண்ணெய்யில் பாமாயிலை கலப்படம் செய்வதை உணவு ஆய்வாளர் மூலம் மாதிரி எடுத்து தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆணையர் த.தி. பால்சாமி: மாநகராட்சி பகுதிகளிலுள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்óகப்படும். வணிக நிறுவனங்களை ஆய்வு செய்து காலாவதியான பொருள்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தென்னூர் பாலத்தின்கீழ் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.