தினமலர் 26.02.2010
கலப்பட டீ குடித்தால் புற்றுநோய், சிறுநீரக கோளாறு உதவி நகர்நல அலுவலர் எச்சரிக்கை
கோவை : “”கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சில ஓட்டல்கள், டீக்கடைகளில் கலப்படம் செய்த டீ விற்பனை செய்யப்படுகிறது. போலி சாயம் ஏற்றப்பட்டு தயாரிக்கப்படும் இவ்வகை கலப்பட டீயை குடித்தால் புற்றுநோய், கிட்னி கோளாறுகள் ஏற்படும்,” என, மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர் சுமதி எச்சரித்துள்ளார். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கலப்பட டீத்தூள் விற்பனை செய்யப்படுகிறது. சிறு டீக்கடைகள் முதல் பெரிய ஓட்டல்கள் வரை போலி டீத்தூளினால் தயாரிக்கப்பட்ட டீயை விற்று லாபம் பார்த்து வருகின்றன. நீண்ட நாட்களாக இந்த டீயை குடிப்ப வர்கள் வயிற்று உபாதை, சிறுநீரக கோளாறுகளால் அவதிப்படுகின்றனர். பெரிய பிராண்டுகளின் பெயரில் சிறு மாற்றங்கள் செய்து, அசல் “பேக்கிங்‘ போல் விற்பனை செய்வதால், மக்களால் இவற்றை கண்டுபிடிக்க முடிவதில்லை. ஒரு கிலோ டீத்தூளில் அதிக எண்ணிக்கையிலான டீ தயாரிக்க டீக்கடை, ஓட்டல் உரிமையாளர்கள் இவ்வகை டீத்தூளை குறைந்த விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். இதைத் தடுக்க சுகாதாரத் துறையினர் சோதனையிடுகின்றனர். அடிக்கடி ரெய்டுகள் நடத்தப்படுகின்றன. கோவையில் சமீபத்தில் ஒப்பணக்கார வீதி, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, வேலாண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 20 கடைகளில் ரெய்டு நடத்த பட்டது. கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த டீத்தூள் பாக் கெட்டுகள் சோதனைக்காக சேகரிக்கப் பட்டன. இவை, சேலத்தில் உள்ள உணவு கலப்பட பிரிவுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளன.இது பற்றி மாநகராட்சி உதவி நகர் நல அலுவலர் சுமதி கூறியதாவது: டீத்தூளின் தரம் பற்றி பேக்கரியில் கேட்டபோது, இரு பிராண்டுகளை மிக்ஸ் செய்து வைத்திருப்பதாக கூறினர். அவற்றின் பில்களையும் காண்பித்தனர். இரு பிராண்டுகளையும் சுடுநீரில் தனியாக பரிசோதித்து பார்த்தபோது லேசாக கலர் இருந்தது. மிக்ஸ் செய்து பார்த்தபோது அடர் கலர் கிடைத்தது. இதில் இருந்து பிரபல பிராண்டுகளின் பெயரில் போலி டீத்தூள் விற்பனை நடப்பது உறுதியாகிறது. சிறு கடைகள் முதல் பெரிய ஓட்டல்கள் வரை இதே போன்ற டீத்தூளைதான் பயன்படுத்துகின்றனர். இதற்கு முன் நடந்த ரெய்டில் நடத்தப்பட்ட நான்கு சாம்பிள்களில், இரு சாம்பிள்கள் போலியானவை என அறிக்கை வந்துள்ளது. கலப்பட டீத்தூளினால் தயாரிக்கப்பட்ட டீயை நீண்ட நாள் குடிப்பவர்களுக்கு புற்றுநோய், சிறுநீர் கோளாறு ஏற்படுவது உறுதி. இதில் சேர்க்கப்படும் போலி நிறமிகள் பெட்ரோலியம் பொருட்களால் தயாரிக்கப்படுபவை. இவ்வாறு, மாநகராட்சி நகர் நல அலுவலர் சுமதி கூறினார்.
போலி டீத்தூள் கண்டுபிடிக்க… :””கடைகளில் சில்லறையாகவோ, மொத்தமாகவோ டீத்தூள் வாங்குபவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குளிர்ந்த நீரில் டீத் தூளை போடும்போது சாயம் வந் தால், அது நிச்சயமாக கலப்பட டீத் தூள்தான். ஒரிஜினல் டீத்தூளை, சுடுநீரில் கலக்கினால் மட்டுமே நிறம் கிடைக்கும். பிரபல பிராண்டுகளை பேக்கிங் ஆக வாங்குபவர்களும் வீட்டில் இந்த சோதனையை செய்து பார்க்கலாம். மக்கள் விழிப்புணர்வு மூலம் மட்டுமே கலப்பட டீத்தூள் விற்பனையை தடுக்க முடியும். போலி டீத்தூள் என கண்டறிந்தால், 0422-2395156 என்ற எண்ணுக்கு தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார் சுமதி.