தினமணி 24.02.2010
கலப்பட டீ தூள் விற்றால் சட்ட நடவடிக்கை
அரவக்குறிச்சி, பிப். 23: கலப்பட டீ தூள் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.
கரூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சதாசிவம் உத்தரவின் பேரில் அரவக்குறிச்சி வட்டாரப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள், டீக்கடைகளில் டீத்தூள்களில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என சுகாதாரத் துறை அலுவலர்கள் திங்கள்கிழமை திடீர் ஆய்வு நடத்தினர்.
அங்கிருந்த டீத்தூள் பாக்கெட்களில் விற்பனை உரிமம், டீத்தூளின் தரம், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி போன்றவை ஆய்வு செய்யப்பட்டன. மொத்தம் 26 கடைகளில் நடத்திய ஆய்வில், 12 கடைகளில் இருந்த டீத்தூளை மாதிரிக்காக எடுத்துச் சென்றனர். கலப்பட டீத்தூள் விற்பனை செய்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் எச்சரிக்கை செய்தனர்.
ஆய்வின்போது, வட்டார மருத்துவ அலுவலர் சாந்திகண்ணன், டாக்டர் கௌதமன், சுகாதார ஆய்வாளர்கள் டைட்டஸ், கருப்புசாமி, சிவலிங்கம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.