தினமணி 12.03.2010
கலப்பட பருப்புகள் விற்பனையா?
உடுமலை, மார்ச் 11: கலப்பட பருப்புகள் விற்பனையில் உள்ளதா என, உடுமலையில் சுகாதார அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
÷உடுமலை பகுதிகளில் கலப்படம் செய்யப்பட்ட மற்றும் சாயமேற்படுத்தப்பட்ட துவரம் பருப்புக்கள், கடலை பருப்புக்கள் மற்றும் கடலை மாவு உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் இருந்து வந்ததது. இதைத் தொடர்ந்து, உடுமலை ஒன்றிய பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் சுகாதாரத் துறையினர் வியாபார நிறுவனங்கள் மற்றும் மளிகை கடைகளில் வியாழக்கிழமை திடீர் சோதனைகளை நடத்தினர். ÷
எரிசனம்பட்டி, பெரியவாளவாடி, அமராவதி நகர், செல்லப்பம்பாளையம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் இந்த சோதனைகளை நடத்தினர். இதில் பல்வேறு கிராமங்களில் உள்ள மளிகைக் கடை மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த துவரம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் கடலை மாவு ஆகிய உணவு பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டன. ÷இந்த அதிரடி ஆய்வில் 18 மளிகை கடைகளில் சந்தேகத்துக்குரிய பருப்பு மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. உணவு கலப்பட சட்டத்தின் கீழ் பொது சுகாதார சட்ட விதிகளில் 1939-ன் படி கடைக்காரர்கள் முறையான உரிமம் பெற்றுள்ளனரா என்பதையும் சுகாதார விதி முறைகளின்படி பராமரிக்கப்பட்டு வருகின்றனவா என்பது குறித்தும் ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டன.
÷சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.மகாராசன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் பி.நாகதிருமூர்த்தி, பி.கிருஷ்ணமூர்த்தி, கே.சிவானந்தம், எம்.கோடீஸ்வரன் உள்ளிட்ட இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர்.