தினமணி 2.11.2009
களியக்காவிளை பேரூராட்சியில் உள்ளாட்சி தின விழா
களியக்காவிளை, நவ. 1: களியக்காவிளை பேரூராட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை உள்ளாட்சி தின விழா கொண்டாடப்பட்டது.
பேரூராட்சித் தலைவி எஸ். இந்திரா தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஏ. சலாவுதீன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் இரா. சங்கர் வரவேற்றுப் பேசினார்.
இதில் விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் ஜி. ஜான்ஜோசப் பேசியதாவது:
பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் விழா நடத்துவது போல உள்ளாட்சி தின விழா நடத்தப்படுகிறது.
இந்த விழா கடந்த ஆண்டுகளில் செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகளை நினைத்துப் பார்க்கவும், அடுத்த ஓராண்டு செய்ய உள்ள வேலைகளை நிர்ணயம் செய்வதற்கும் பயன்பட வேண்டும்.
வரும் நாள்களில் மக்கள் பங்கேற்பு இருக்கக்கூடிய விழாவாகவும், மக்கள் கருத்துகளை சொல்லக்கூடிய வகையிலும் இந்த விழா மாற்றப்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
சுற்றுச் சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தை மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. இந்த பேரூராட்சியும் அதன் பங்கை செம்மையாக செய்ய வேண்டும் என்றார் அவர்.
விழாவில் பேரூராட்சி உறுப்பினர்கள் விஜயானந்தராம், ஆர். பத்மினி, என். விஜயேந்திரன், வின்சென்ட், அ. ராஜு, பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் எஸ். செல்லப்பன், குழித்துறை கல்வி சரக பெற்றோர்– ஆசிரியர் கழக தலைவர் எஸ். மாகீன் அபுபக்கர், களியக்காவிளை வர்த்தகர்கள் சங்க பொதுச் செயலர் மு. ரிபாய் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.