கழிவறை இணைப்புகளை பாதாள சாக்கடையில் விட சிறப்பு சலுகை
ஊட்டி:ஊட்டி கோடப்பமந்து கால்வாயில் திறந்தவெளியில் விடப்பட்டுள்ள வீடுகளின் கழிவறை இணைப்புகளை பாதாள சாக்கடைக்குள் விட சிறப்பு சலுகையுடன் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.ஊட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 27 வார்டு மக்களின் கழிவறை மற்றும் கழிவுநீர் ஊட்டி நகரின் மத்தியில் ஓடும் கோடப்பமந்து கால்வாயில் செல்கிறது. தவிர, மழைநீரும் இக்கால்வாயில் செல்லும் நிலையில், ஊட்டி ஏரியில் தான் இவை அனைத்தும் கலக்கின்றன. இதனால், சுகாதார சீர்கேடு அதிகரித்து, ஏரியின் ஒரு பகுதி கழிவுகளால் சூழ்ந்துள்ளது. கால்வாயில் கழிவுகள் செல்வதை தவிர்க்கும் நோக்கில் நகரில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டு, வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களின் கழிப்பறை, சமையலறை கழிவுகள், குளியலறை நீர் ஆகியவற்றை வெளியேற்றும் இணைப்புகள் பாதாள சாக்கடையில் இணைக்கப்பட்டன. இதன் மூலம் கழிவுகள் கலக்காத நீர் மட்டுமே கோடப்பமந்து கால்வாயில் செல்லும், என எதிர்பார்க்கப்பட்டது.
இணைப்பை சீராக்க திட்டம்கோடப்பமந்து கால்வாயை ஒட்டியுள்ள பகுதிகளில் மட்டும், கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன; இதில்,”6,000 வீடுகளின் கழிவறை மற்றும் கழிவுநீர் வெளியேறும் இணைப்புகள், கோடப்பமந்து கால்வாயில் திறந்த வெளியில் விடப்பட்டுள்ளன,’ என நகராட்சி நிர்வாகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், திறந்தவெளியில் செல்லும் கழிவுநீர் கால்வாயை பாதாள சாக்கடைக்குள் விடுவதற்கான நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.ஊட்டி நகராட்சி கமிஷன் சிவகுமார் கூறியதாவது;திறந்த வெளியிலும், ஏரி நீரிலும் மனித கழிவுகள் தேங்குவதால் பலவித நோய்கள் வரும் என்பதால் திறந்தவெளியில் கழிவுகள் கட்டப்படுவதை தடுக்க மாநில அரசு முனைப்பு காட்டி வருகிறது.
ஊட்டி கோடப்பமந்து கால்வாயில் திறந்தவெளியில் கழிப்பறை மற்றும் கழிவறை கழிவுகளின் இணைப்பை பலர் விட்டுள்ளனர்; இவர்கள், பாதாள சாக்கடையில் தங்களது இணைப்புகளை விட நகராட்சியில், 3,000 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்; ஒரே சமயத்தில் 3,000 ரூபாய் கட்டணத்தை செலுத்த முடியாதவர்கள் ஆறு மாத தவணையில் தலா 500 வீதம் செலுத்தி, தங்களது கழிவுநீர் இணைப்பை, பாதாள சாக்கடைக்குள் விடுவதற்கான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.நகராட்சி எல்லைக்குள், மாநில அரசின் குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு நகராட்சி சார்பில் கழிவுநீர் இணைப்புகளை பாதாள சாக்கடைக்குள் விடும் பணியை இலவசமாகவே செய்து கொடுக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே, நகராட்சியின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, சிவகுமார் கூறினார்.