தினகரன் 17.08.2010
கழிவு அடைப்பு தடுக்க விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்ட உத்தரவு
கோவை, ஆக 17: கோவை மாநகராட்சியில் 377.17 கோடி ரூபாய் செலவில், 72 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய் பதிப்பு பணி நடத்தப்படுகிறது. தற்போது 26 வார்டுகளில் பணி முழு அளவில் நடக்கிறது. பல இடங்களில் கழிவு நீர் சேகரிப்பு குழாய், சோதனை குழாய் பதிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கழிவு நீர் சேகரிப்பு சோதனை குழாய்களில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இந்த அடைப்பை சரி செய்ய முயன்றால் விஷ வாயு தாக்கி உயிரிழப்பு ஏற்படுவதும் நடக்கிறது.
சில பகுதியில் கழிவு நீர் குழாய் அடைப்பு அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடைப்பினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் நிகழ்ச்சியை மாநகராட்சி துவக்கியுள்ளது. கழிவறைகளில் கண்ட கழிவுகளை குவிப்பதால் பெரும் அடைப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்கவேண்டும் என விழிப்புணர்வு பிரசாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, மேயர் வெங்கடாசலம், துணை மேயர் கார்த்திக் ஆகியோர், கழிவு அடைப்பை தவிர்க்கும் விழிப்புணர்வு பிரசார ஸ்டிக்கர் ஒட்டும் பணியை துவக்கி வைத்துள்ளனர். கோவை மாநகரில் பொதுமக்கள் தங்கும் விடுதி, மருத்துவமனை, நகர்ப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகள் ஸ்டிக்கர் ஒட்டப்படும். அனைத்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் பிரசார நோட்டீஸ் வழங்கும் பணி தீவிரமாக நடக்கிறது.