தினகரன் 06.10.2010
கழிவுகள் இல்லாத பெங்களூர் நகரம் மேயர் நடராஜ் உறுதி
பெங்களூர், அக். 6: பெங்களூரை கழிவுகள் இல்லாத மாநகரமாக்க லட்சியம் கொண்டுள்ளதாக மேயர் எஸ்.கே.நடராஜ் தெரிவித்தார்.
மாநகரில் குவியும் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக மேயர் எஸ்.கே.நடராஜ் மற்றும் துணை மேயர் என்.தயானந்த் ஆகியோர் கடந்த மாதம் மும்பை சென்று அங்குள்ள பாபா அடாமிக் ரிசர்ச் மையத்தில் மூலம் அமைக்கப்பட்டுள்ள திட கழிவு மேலாண்மை திட்டத்தை பார்வையிட்டனர். இதை பெங்களூரில் செயல்படுத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று மேயர் நடராஜ் அதிகாரிகளுடன் மாநகரில் கே.ஆர்.மார்கெட், ஆனேக்கல் உள்பட பல பகுதிகளில் இடம் தேர்வு செய்தனர். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் மேயர் கூறியதாவது:
நாட்டில் திட கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்துவதில் மும்பை மாநகராட்சி முதலிடத்தில் உள்ளது. அம்மாநகராட்சி மூலம் அனைத்து வார்டுகளிலும் திட கழிவு சேமிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் எளிதில் அழிந்து போகும் பொருட்கள் ஒரு இயந்திரத்திலும், எளிதில் அழியால் இருக்கும் பிளாஸ்டிக் உள்பட மற்ற பொருட்கள் இன்னொரு இயந்திரத்திலும் சேகரிக்கப்படுகிறது. இதே திட்டத்தை பெங்களூரிலும் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
மும்பை மாநகரில் செயல்படுத்தும் திட்டத்தை பெங்களூரில் செயல்படுத்த மும்பையில் இயங்கி வரும் பல நிறுவனங்கள் முன்வந்துள்ளது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் திட கழிவு இயந்திரம் அமைக்க முன் வரும் நிறுவனங்கள் நமது மாநகராட்சியிடம் நிதி கேட்காமல், அவர்களே முதலீடு செய்து தொடங்கு வதாக உறுதியளித்துள்ளனர்.
இதில் மாநகராட்சிக்கு எந்த நிதி சுமையும் ஏற்படாது. விரைவில் மாநகரில் உள்ள சில இடங்களில் திட கழிவு சேகரிப்பு மையம் அமைக்கப்படும். இதன் மூலம் மாநகரம் சுத்தமாக மாறிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
நடராஜ்