தினமலர் 06.09.2010
கழிவுநீர் சூழ்ந்ததால் நோய் பரவும் அபாயம் : விவேகானந்தா நகர் பொதுமக்கள் அவதி
ஆவடி: ஆவடி விவேகானந்தா நகரில் மழைநீருடன், கழிவுநீர் கலந்து தெருக்களில் குளம் போல் தேங்கியிருப்பதால், அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆவடி, நகராட்சியின் கீழ் 48 வார்டுகளிலும் ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் 103.84 கோடி ரூபாயில் குடிநீர் திட்டம், 158.05 கோடி ரூபாயில் கழிவு நீர் பாதாள சாக்கடை திட்டம் நடைபெற்று வருகிறது. இத்திட்ட பணிகளுக்காக சாலைகளில் பள்ளம் தோண்டியதால், பல இடங்களிலும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கழிவு நீர் வெளியேற சரியான வழியில்லாததால் ஆங்காங்கே குளம் போல் தேங்கியுள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், பருத்திப்பட்டு ஏரியில் கலக்கின்றது. இதனால் பருத்திப்பட்டு ஏரி மாசடைந்து விட்டது. இந்நிலையில், ஏரியில் கலக்கும் கழிவு நீர், வெளியேறி ஆவடி– பூந்தமல்லி சாலையில் கன்னிகாபுரம் அடுத்துள்ள விவேகானந்தா நகர், திருவள்ளுவர் தெரு, காந்தி, பல்லவன், அண்ணா, சேரன் தெருக்களில் புகுந்து விட்டது. விவேகானந்தா நகரில் உள்ள கால்வாய் அடைப்பு காரணமாக கழிவுநீர் இங்கேயே தேங்கி விட்டது. இதனால், இங்கு வசிப்பவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற இரண்டு மதகுகள் உள்ளன.
தற்போது ஒரு மதகு வழியாக ஏரி நீர் வெளியே செல்கிறது. மற்றொரு மதகு பகுதியில் ஏரி நீர் வெளியே செல்ல வழியில்லாமல் இத்தெருக்களில் புகுந்து விடுகிறது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், “விவேகானந்தா நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கழிவு நீர் வெளியேற வசதியில்லை. நாங்கள் கழிவு நீரை, கழிவு நீர் தொட்டியில் சேமித்து வைத்து, வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்துகிறோம். தொற்று நோய் பரவும் என்பதால் எங்கள் வீட்டு கழிவு நீரை வெளியே விடாமல் பாதுகாப்பாக நாங்கள் வெளியேற்றுகிறோம். ஆனால் எங்கோ இருந்து வரும் கழிவு நீர் சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் தேங்கி, இங்குள்ள குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் வகையில், முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கிறது. நகராட்சி அதிகாரிகள் இப்பகுதியில் தேங்கும் கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றனர்.