தினமணி 13.04.2010
கவுண்டம்பாளையம்– வடவள்ளி கூட்டுக் குடிநீர் திட்டம் சோதனையோட்டம்
பெ.நா.பாளையம், ஏப். 12: கவுண்டம்பாளையம் நகராட்சி மற்றும் வடவள்ளி பேரூராட்சிப் பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கும் வண்ணம் ரு. 30.38 கோடி செலவில் நடைபெற்று வந்த கவுண்டம்பாளையம்– வடவள்ளி கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் விரைவில் நிறைவடையும் தறுவாயை எட்டியுள்ளன.
பவானி ஆற்றின் நெல்லித்துறையிலிருந்து ராட்சதக் குழாய்களின் மூலம் இப்பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு வரத் திட்டமிடப்பட்டு அதன் பணிகளை 2007-ம் ஆண்டு, கோவையில் முதல்வர் கருணாநிதி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். நெல்லித்துறையிலிருந்து கவுண்டம்பாளையம் வரை 37கி,மீ. தூரம் குழாய்கள் பதித்தல், வீரபாண்டிப் பிரிவில் சுத்திகரிப்பு நிலையம் நிர்மாணித்தல், கவுண்டம்பாளையத்தில் 11 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சேமிப்புத் தொட்டி மற்றும் கவுண்டபாளையம், வடவள்ளி பகுதிóகளில் 15 மேல்நிலைத் தொட்டிகள் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்த வண்ணம் இருந்தன.
தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்ததால், இதன் நீர்வரத்தை சோதனை செய்ய குடிநீர் வடிகால் வாரியம் திட்டமிட்டது. இதன்படி சனிக்கிழமை மாலை நெல்லித்துறையிலிருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு வீரபாண்டி சேமிப்பு நிலையத்தில் சேகரிக்கப்பட்டது.
பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை கவுண்டம்பாளையத்தில் உள்ள சேமிப்புத்தொட்டிக்கு அனுப்பப்பட்டது. அத்தண்ணீர் எவ்வித தடையுமின்றி சங்கனூர் பள்ளத்திலிருந்த குழாய்க்கு வந்து சேர்ந்தது. இதனை நகராட்சித் தலைவர் கே.எம்.சுந்தரம் மற்றும் கவுன்சிலர்கள், குடிநீர் வடிகால் வாரியப் பொறியாளர் மனோகரன், உதவிப் பொறியாளர் பூவலிங்கம், நந்தகுமார் ஆகியோர் பார்வையிட்டனர்.
“கவுண்டம்பாளையம் முதல் வடவள்ளி வரை குழாய்கள் பதிக்கும் பணி ஒருசில தினங்களில் முடிவடைந்து விடும். இது முழுமையாக நிறைவடைந்தவுடன் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
“இதுவரை இப்பகுதியில் பில்லூர் மற்றும் சிறுவாணி குடிநீர்ப்க் திட்டங்களின் கீழ் தினமும் 31 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. புதிய திட்டத்தின் வாயிலாக தினமும் 90 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும்’ என்று, நகராட்சித் தலைவர் சுந்தரம் கூறினார்